ஷா அலம், ஜன 15 - தமிழர்களின் வாழ்வியலோடு உள்ள விவசாயம், அதற்கு உதவும் விலங்குகள், நம்மை சுற்றி இருக்கும் உறவினர்கள் என இயற்கை வளங்களை போற்றும் ஒரு திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுகிறது என மலேசிய இந்து சங்கம் தலைவர் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார்.
தமிழர்கள் எண்ணற்ற விழாக்களை கொண்டாட்டுகின்றனர் அவற்றில் ஜனவரி மாதம் மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நாள் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களினாலும் கொண்டாடப்படுகின்றது.
தை பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று அனைவரும் வீட்டில் இருக்கக்கூடிய தேவையில்லாத பொருள்களை எரித்து போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள் என தங்க. கணேசன் விவரித்தார்.
"பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வார்த்தைக்கு ஏற்ப நம்மை சுற்றி இருக்கின்ற பழைய வெறுப்பான காரியங்களை விட்டுவிட்டு புதிய நன்மையான விஷயங்களை வாழ்வில் எடுத்துகொண்டு புதிய ஆண்டை தொடங்குவதற்குப் போகி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது.
பின் சூரிய பொங்கல் தைத்திங்கள் முதல்நாள் கொண்டாடப் படுகின்றது. இது உழவர் பெருமக்களுக்குப் பொன்னான நாள். அதனால் தான் இதை உழவர் திருநாள் என்றும் அழைக்கின்றனர். உழைப்பின் உயர்வினை உலகுக்கு உணர்த்தும் உன்னதத் திருநாள் ஆகும்.

அன்றைய தினம் சூரியனுக்கு பொங்கல் வைக்கப்படும். இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் நம்மை பாதுகாக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். பொங்கள் பானையில் மஞ்சள் குங்குமம் இட்டு பொங்கல் பானையின் கழுத்து பகுதியில், விளைந்த மஞ்சள் கொத்தினை கட்டி, நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைக்கப்படும். பின் சமைத்த பொங்கல் சூரியனுக்குப் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும்.
தைத்திங்கள் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலாகும். உழவர்களின் வாழ்வில் முக்கிய பங்காக இருப்பது கால்நடைகள் கிராமங்களில் மாட்டு பொங்கலானது மிக சிறப்பாக கொண்டாடப்படும் உழவுத் தொழிலுக்கு மட்டும் அல்லாமல் உழவனுக்கும் நண்பனாய் தோழனாய் உடன் பிறவா சகோதரனாய் உறவாய் விளங்குவது கால்நடைகளே என்றார் தங்க கணேசன்.

மாடுகள் இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்தி மாடுகளை குளிப்பாட்டி வண்ணம் பூசி, வருடம் முழுவதும் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக பொங்கல் கொண்டாடப் படுகிறது. மாட்டு பொங்கலின் போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
காணும் பொங்கல் என்பது பொங்கல் பண்டிகையின் நான்காவது மற்றும் கடைசி நாள் கொண்டாட்டமாகும். இது உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களைக் காணும் ஒரு சமூக நிகழ்வு ஆகும். அன்று பெரியோர்களிடம் ஆசி பெறுதல், குடும்பத்துடன் ஒன்றுகூடி விருந்துண்டு மகிழ்தல் மற்றும் சமூக ஒற்றுமையைப் பேணுதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டது.
இந்நாளை கன்னிப் பொங்கல் என்றும் அழைப்பர். மேலும், இந்த நாளில் திருமணம் ஆகாதப் பெண்கள் தங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என எண்ணி பொங்கல் வைத்து கடவுளுக்குப் படைப்பர்.
தமிழர்களின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் இந்த பொங்கல் விழாவை தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாகக் கொண்டாட மலேசிய இந்து சங்கம் தலைவர் கேட்டு கொண்டார்.


