ஜெனீவா, ஜனவரி 14- பெரும்பாலான நாடுகளில் வரி விகிதங்கள் குறைவாக இருப்பதால், சர்க்கரை பானங்கள் மற்றும் மதுபானங்களின் விலைகள் சாமானியர்கள் எளிதில் வாங்கும் அளவில் உள்ளன. இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே உடல் பருமன், நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது என உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இரண்டு உலகளாவிய அறிக்கைகளின் மூலம், சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் மதுபானங்கள் மீதான வரியை கணிசமாக அதிகரிக்குமாறு அரசாங்கங்களுக்கு அந்த நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
பலவீனமான வரி விதிப்பு முறைகளால் இத்தகைய தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மலிவாகக் கிடைப்பதாகவும், அதே நேரத்தில் தவிர்க்கக்கூடிய தொற்றா நோய்களால் சுகாதார அமைப்புகள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்திப்பதாகவும் அந்த அறிக்கைகள் எச்சரிக்கின்றன.
மேலும் மதுபான வரி தொடர்பான மற்றொரு அறிக்கை, குறைந்தது 167 நாடுகள் மதுபானங்களுக்கு வரி விதிப்பதையும், 12 நாடுகள் முழுமையான தடை விதித்துள்ளதையும் காட்டுகிறது. இருந்தபோதிலும், 2022-ஆம் ஆண்டு முதல் பணவீக்கம் மற்றும் வருமான வளர்ச்சிக்கு ஏற்ப வரி உயர்த்தப்படாததால், பெரும்பாலான நாடுகளில் மதுபானங்களின் விலை மலிவாகவே உள்ளது.
உலக சுகாதார நிறுவனம் தனது "3 by 35" திட்டத்தின் கீழ், 2035-ஆம் ஆண்டிற்குள் புகையிலை, மது மற்றும் சர்க்கரை பானங்களை மக்கள் எளிதில் வாங்க முடியாத அளவிற்கு அவற்றின் விலையை உயர்த்தவும், வரி முறையை மறுசீரமைக்கவும் நாடுகளை வலியுறுத்தி வருகிறது.


