கோலாலம்பூர், ஜனவரி 14— இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற 2026 இந்திய ஓப்பன் பூப்பந்து போட்டியின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து, தொழில்முறை ஆடவர் ஒற்றையர் பிரிவு வீரர் லீ ஜி ஜியா வெளியேறினார்.
2024 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இவர், டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கே-விடம் மூன்று செட் ஆட்டங்களில் தோல்வியடைந்தார். முதல் ஆட்டத்தில் தடுமாறிய லீ ஜி ஜியா 13-21 எனத் தோற்றார். இரண்டாவது ஆட்டத்தில் மீண்டெழுந்து 21-18 என வென்றாலும், தீர்மானமிக்க மூன்றாவது ஆட்டத்தில் அந்த வேகத்தைத் தக்கவைக்க முடியாமல் 18-21 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார்.
கடந்த வாரம் மலேசிய ஓப்பன் போட்டியிலும் முதல் சுற்றிலேயே வெளியேறிய லீ ஜி ஜியாவுக்கு, இந்த பருவத்தில் இது இரண்டாவது தொடக்கநிலைத் தோல்வியாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனா மாஸ்டர்ஸ் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக விலகிய அவர், மீண்டும் தனது பழைய நிலைக்குத் திரும்பப் போராடி வருகிறார்.
இதற்கிடையில், நாட்டின் ஆடவர் இரட்டையர் இணையான மேன் வெய் சோங் - டீ கை வுன், சக மலேசிய இணையான நூர் முகமது அஸ்ரின் அயூப் - டான் வீ கியோங்கை 21-16, 21-15 என்ற கணக்கில் தோற்கடித்தனர். இவர்கள் அடுத்த சுற்றில் பிரான்சின் கிறிஸ்டோ போபோவ் - தோமா ஜூனியர் போபோவ் இணையுடன் மோதவுள்ளனர்.
இறுதியாக, மற்றுமொரு மலேசிய இரட்டையர் இணையான ஓங் இயூ சின் - தியோ ஈ யி, இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன் - எம்.ஆர். அர்ஜுனிடம் 15-21, 18-21 என்ற கணக்கில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினர்.


