ஷா ஆலம், 14 ஜனவரி: இன்று அதிகாலை கோலாலம்பூர், சௌ கிட் பகுதியில் உள்ள பழைய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட 'ஓப் குத்திப்' (Op Kutip) சோதனையில், 23 பெண்கள் உட்பட 79 சட்டவிரோதக் குடியேறிகளை மலேசிய குடிநுழைவுத் துறை கைது செய்தது.
அந்த இடம் சட்டவிரோதக் குடியேறிகளின் முக்கியத் தங்குமிடமாக இருப்பதை உளவுத் தகவல்கள் மூலம் உறுதி செய்த பிறகு, நள்ளிரவு 12.30 மணியளவில் இந்தச் சோதனை தொடங்கப்பட்டதாக குடிநுழைவு துறையின் செயல்பாட்டு பிரிவு துணை இயக்குநர் டத்தோ லோக்மான் எஃபெண்டி ராம்லி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், முறையான அனுமதி இல்லாமல் மற்றும் விசா காலாவதியான பிறகும் தங்கியிருந்தது போன்ற குற்றங்களுக்கு அவர்கள் பிடிபட்டதாகவும் அவர் கூறினார். "கைது செய்யப்பட்டவர்களில் 39 இந்தோனேசியர்கள், 25 வங்காளதேசிகள், 10 நேபாளிகள், இருவர் இந்தியர்கள், இருவர் பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒருவர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்," என்று அஸ்ட்ரோ அவானி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் பாதுகாவலர்களாக வும் கட்டுமானத் தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர். அவர்கள் மிகவும் நெரிசலான இடங்களில் வசித்து வருவதால் சுகாதாரச் சிக்கல்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையின் போது, சில வெளிநாட்டினர் சின்க் அடியிலும், பழைய பொருட்களின் குவியலுக்குள்ளும் மற்றும் தண்ணீர் தொட்டி இடுக்குகளிலும் ஒளிந்துகொண்டு தப்பிக்க முயன்றதும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக குடிநுழைவுத்துறை சட்டம் 1959/63-இன் பிரிவு 6(1)(c) மற்றும் 15(1)(c)-இன் கீழ் குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.


