நிபோங் திபால், ஜனவரி 13 — மாணவர்களுக்கான RM150 பள்ளி ஆரம்ப உதவித் தொகை , எவ்வித பிடித்தமும் இன்றி பெற்றோர்களிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் வலியுறுத்தினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்க (PIBG) கட்டணம் போன்ற இதரக் கொடுப்பனவுகளைத் தனியாகச் செலுத்த வேண்டுமே தவிர, இந்த உதவித் தொகையில் இருந்து கழிக்கக்கூடாது என்று அவர் கூறினார்.
“இந்த RM150 நிதியானது மாணவர்களின் பள்ளித் தேவைகளுக்காகவே மடானி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அது முழுமையாக வழங்கப்பட வேண்டும். இந்த ஆண்டு, நாடு முழுவதும் உள்ள முதலாம் ஆண்டு முதல் படிவம் 6 வரையிலான சுமார் 52 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், 800 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
இதுவரை இந்த நிதி விநியோகம் சீராக நடைபெற்று வருவதாகவும், 10,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஏற்கனவே நிதியைப் பெற்றுள்ளதால் இந்த வாரத்திற்குள் விநியோகத்தை முடிக்க எதிர்பார்ப்பதாகவும் நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார். முன்னதாக, பினாங்கு மாநிலத்தில் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 34 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதியை அவர் ஒப்படைத்தார்.
மற்றொரு நிலவரத்தில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ‘மாணவர் பாதுகாப்பு கொள்கையில்’ (Polisi Perlindungan Murid) பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அடுத்த வாரத்திற்குள் கையெழுத்திடுவதை கல்வி அமைச்சு உறுதி செய்யும் என்று அவர் கூறினார். இக்கொள்கையானது பள்ளிகளில் கேலி செய்தல், பாலியல் துன்புறுத்தல், சித்திரவதை மற்றும் மாணவர்களின் மனநலம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது.
பள்ளிகளில் நிலவும் கேலி செய்தல் மற்றும் வன்முறைச் சம்பவங்களை களைவதற்கு தமது அமைச்சு உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.


