பெட்டாலிங் ஜெயா, ஜனவரி13- ஏர்ஆசியா எக்ஸ் (AirAsia X) நிறுவனம் இனி 'ஏர்ஆசியா' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஜனவரி 19 முதல் புதிய பங்குகளாகப் பட்டியலில் இடம் பெறும் என்று Capital A நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் இன்று தெரிவித்தார்.
அதே நாளில், Capital A நிறுவனம் தனது பிஎன்17 (PN17) அந்தஸ்திலிருந்து வெளியேறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் என்றும் அவர் லிங்க்ட்இன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான இறுதி நீதிமன்ற விசாரணை ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. "ஏர்ஆசியா இனி ஒரே விமானக் குழுமமாகவும் பிராண்டாகவும் இருக்கும். உலகளாவிய லட்சியங்களுடன் ஏர்ஆசியா எக்ஸ் மற்றும் ஏர்ஆசியாவை ஒரே குழுமமாக நாங்கள் ஒருங்கிணைப்போம்," என்று அவர் கூறினார்.
மேலும், நிறுவனம் தற்போது தனது புதிய விமானங்களுக்கான ஆர்டர்களை இறுதி செய்து வருவதாகவும், இது சிறந்த திட்டமிடல் மூலம் செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்க உதவும் என்றும் அவர் வெளிப்படுத்தினார்.
இதற்கிடையில், Capital A நிறுவனத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், ஆய்வாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான ஈடுபாட்டை நிறுவனம் தீவிரப்படுத்தும் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
"பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல், தளவாடங்கள், ஆன்லைன் பயண முகமை, உணவு மற்றும் பானங்கள் மற்றும் பிராண்டிங் ஆகிய ஐந்து முக்கிய வணிகங்களை மையமாகக் கொண்ட மறுசீரமைப்புக்குப் பிந்தைய பார்வையை விளக்குவதற்கு, வரும் மாதங்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர் சந்திப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்," என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


