ஷா ஆலம் ஜன 12- தித்திக்கும் தை பொங்கலை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அளவிலான தைப்பொங்கல் தமிழர் திருவிழா வரும் ஜனவரி 17 ஆம் தேதி அம்பாங் டத்தோ அமாட் ரசாலி மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவுடன் 'கித்தா சிலாங்கூர்' (Kita Selangor) திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில், காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. வரும் ஜனவரி 17 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, அம்பாங் ஜெயா, கம்போங் தாசேக் பெர்மாயில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் முதல் தைப்பொங்கல் விழா நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை, அம்பாங், டத்தோ அகமட் ரசாலி மண்டபத்தில் சிலாங்கூர் மாநில அளவிலான தைப்பொங்கல் தமிழர் திருநாள் திருவிழா அதிகாரப்பூர்வ நடைபெறும். சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் பின் ஷாரி தலைமையில் நடைபெறும் விழாவில், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து சிறப்பிக்கின்றனர் என்று ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
மலேசிய மடாணி (Malaysia MADANI) கொள்கையின் கீழ், பல்லின மக்களிடையே ஒற்றுமையையும் கலாச்சாரப் பெருமையையும் பறைசாற்றும் வகையில் இந்த தைப்பொங்கல் விழா மிகவும் விமர்சையாக நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. சுமார் 8,000 பேர் திரளாகக் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். அந்த வகையில் இவ்வாண்டு நடைபெறும் தைப்பொங்கல் விழாவில் தமிழர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இடம்பெறும்.
மேலும் அனைவருக்கும் சுவையான வாழை இலை உணவுகள் பரிமாறப்படும் என்று அவர் சொன்னார்.


