நாரதிவாட், 12 ஜனவரி: ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் தீவைப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, தாய்லாந்தின் தெற்கு எல்லைப் பகுதியான நாரதிவாட்டில் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும், இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நாரதிவாட் அதிரடிப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் யோடவுட் புயென்பாக் தெரிவித்தார். “மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பேணுவதற்காகத் தாய்லாந்து-மலேசிய எல்லைச் சாவடிகளில் சோதனைகளைத் தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று அவர் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாரதிவாட், யாலா மற்றும் பட்டாணி ஆகிய மூன்று தெற்கு எல்லை மாகாணங்களில் உள்ள 11 எரிபொருள் நிலையங்கள் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு மற்றும் தீவைப்புத் தாக்குதலுக்கு உள்ளாகின.
முகமூடி அணிந்த ஆயுதமேந்திய கும்பலால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். இதுபோன்ற சம்பவங்களை அனுமதிக்க முடியாது என்றும் பாதுகாப்புப் படையினர் நிலைமையைக் கையாண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தொடர் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். இப்பகுதியில் அமைதியைத் திரும்பக் கொண்டு வர தாய்லாந்து காவல்துறை உறுதி பூண்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 24 மணிநேர உதவி எண்களான 191 அல்லது 1599-க்கு அழைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


