கோலாலம்பூர், 12 ஜனவரி: 2026-ஆம் ஆண்டின் புதிய கல்வித் தவணை இன்று தொடங்கியுள்ள நிலையில், அனைத்து மாணவர்களுக்கும், குறிப்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் கல்விப் பயணத்தில் பிரார்த்தனைகளையும் சிறந்த முன்மாதிரிகளையும் துணையாகக் கொள்ள வேண்டும் என்று அவர் தனது முகநூல் பதிவின் மூலம் நினைவுபடுத்தினார். பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் கற்கும் ஒவ்வொரு கல்வியும் விழுமியங்களும் அவர்களை ஒழுக்கமும் அறிவும் உள்ளவர்களாக உருவாக்கி, நாட்டின் எதிர்காலத்திற்குப் பங்களிக்கும் மனிதர்களாக மாற்றட்டும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2022-ஆம் ஆண்டு முதல் மாற்றப்பட்டிருந்த தேசியப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான கல்வி திட்டம், இந்த ஆண்டு முதல் மீண்டும் ஜனவரி மாதத்திற்கே மாற்றப்பட்டுள்ளது.
ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர், லபுவான், புத்ராஜெயா ஆகிய கூட்டரசுப் பிரதேசங்களை உள்ளடக்கிய 'பி' (Group B) பிரிவு மாநிலங்களில் இன்று பள்ளி தவணை தொடங்கியது. கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய 'ஏ' (Group A) பிரிவு மாநிலங்களில் நேற்று பள்ளி தவணை தொடங்கியது என்று அவர் கூறினார்


