கோலாலம்பூர், 12 ஜனவரி: கொரிய ஜோடியான கிம் வோன் ஹோ மற்றும் சியோ சியுங் ஜே ஆகியோரின் நிதானமான ஆட்டம், மலேசியாவின் முன்னணி ஆடவர் இரட்டையர் ஜோடியான ஆரோன் சியா - சோ வூய் யிக் 2026-ஆம் ஆண்டுக்கான மலேசிய ஓப்பன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
புக்கிட் ஜாலில் உள்ள அக்சியாத்தா அரங்கில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், உலகின் முதன்மை நிலை ஜோடியான கொரிய வீரர்கள் தீர்க்கமான மூன்றாவது செட்டில் இக்கட்டான தருணங்களில் மிகவும் நிதானமாகச் செயல்பட்டதாக ஆரோன் சியா தெரிவித்தார். இதன் காரணமாக, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசிய ஓப்பன் பட்டத்தை வெல்லும் முதல் உள்ளூர் ஆடவர் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை அடையும் வாய்ப்பு மலேசியாவுக்கு கை நழுவிப் போனது குறிப்பிடத்தக்கது.
தனது சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாதது குறித்து 28 வயதான ஆரோன் ஏமாற்றம் தெரிவித்தார். சூப்பர் 1000 பெயர் கொண்ட போட்டிகளில் ஏழாவது முறையாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்தப் பட்டத்தை வெல்லும் கனவு மீண்டும் ஒருமுறை தள்ளிப் போயுள்ளதாக அவர் கூறினார்.
தோல்வி அடைந்த போதிலும், இந்த முடிவு ஆண்டின் ஒரு நேர்மறையான தொடக்கமாகும் என்று வூய் யிக் கூறினார். மேலும் சீசன் முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி மலேசியாவுக்குப் பெருமை சேர்க்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
விறுவிறுப்பாக 66 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில் கொரியாவின் வோன் ஹோ - சியோ சியுங் ஜே ஜோடி 21-15, 12-21, 21-18 என்ற செட் கணக்கில் ஆரோன் - வூய் யிக் ஜோடியைத் தோற்கடித்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக மலேசிய ஓப்பன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
வெற்றியாளர்களுக்கு 107,300 அமெரிக்க டாலர் (சுமார் RM 439,232) பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பிடித்த மலேசிய ஜோடிக்கு 50,750 அமெரிக்க டாலர் (சுமார் RM207,745) கிடைத்தது.


