கோலாலம்பூர், 12 ஜனவரி: சிலாங்கூர், பண்டார் ஸ்ரீ புத்ரா தேசிய இடைநிலைப் பள்ளியில் நிலவும் மாணவர்களின் நெரிசலுக்குக் குறுகிய மற்றும் நடுத்தர கால தீர்வாக, தொழில்மயமான கட்டுமான அமைப்பு (IBS) முறையில் 10 கூடுதல் வகுப்பறைகளை கல்வி அமைச்சு கட்டவுள்ளது.
IBS முறையைப் பயன்படுத்தி கூடுதல் வகுப்பறைகளை கட்டுவது மிகவும் பயனுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இதனை மிகக் குறுகிய காலத்தில் முடித்துவிட முடியும் என்று கல்வி அமைச்சர் பட்லினா சீடெக் தெரிவித்தார்.
"தற்போது, கல்வி அமைச்சு பண்டார் ஸ்ரீ புத்ரா தேசிய இடைநிலைப் பள்ளியில் IBS முறையைப் பயன்படுத்தி இரண்டு அடுக்கு கூடுதல் கட்டடத்தைக் கட்டவும் திட்டமிட்டுள்ளது," என்று அவர் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பள்ளியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் இடநெருக்கடி பிரச்சினை, அவர்களின் கற்றல் சூழலின் வசதி மற்றும் செயல்திறனை பாதிப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியைப் பார்வையிட்ட அவர் , பள்ளி நிர்வாகம், சிலாங்கூர் மாநில கல்வித்துறை (JPN), பொதுப்பணித்துறை (JKR) மற்றும் கல்வி அமைச்சின் மேம்பாட்டுப் பிரிவுடன் கலந்துரையாடிய தாகத் தெரிவித்தார்.
“மேலும் வேலையில் வேகம் மற்றும் சுறுசுறுப்பு இருக்க வேண்டும். மக்களின் புகார்களுக்கு தெளிவான மற்றும் விரைவான பதிலை அளிக்க வேண்டும். வழக்கமான முறையில் செயல்படாமல், சமூகத்தின் தேவைகளையும் கருத்துகளையும் கையாள்வதில் அதிகத் திறமையுடன் செயல்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
முன்னதாக, அந்தப் பள்ளியில் உள்ள வகுப்பறைகளில் நிலவும் இடநெருக்கடி குறித்துப் பல சமூக வலைதள பயனர்கள் கவலை தெரிவித்ததோடு, மாணவர்களின் நலன் கருதி இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.


