கோலாலம்பூர், 12 ஜனவரி: கோலாலம்பூர் கிழக்கு-மேற்கு இணைப்பு நெடுஞ்சாலையின் (E37) கிலோமீட்டர் பகுதியில், துப்பாக்கியைப் போன்ற ஆயுதத்தைக் காட்டி மிரட்டியதாக சந்தேகிக்கப்படும் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இது குறித்த காணொளி நேற்று சமூக ஊடகங்களில் வைரலாகியது.
மாலை 4.13 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் 34 வினாடிகள் கொண்ட காணொளி மூலம் கண்டறியப்பட்டது என்று பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ஹூ சான் ஹூக் கூறினார். அதில் ஒரு பன்முனை பயன்பாட்டு வாகனத்தின் (SUV) ஓட்டுநர், கார் கண்ணாடியைத் திறந்து துப்பாக்கியைப் போன்ற ஒரு பொருளைக் காட்டி மிரட்டுவது பதிவாகியுள்ளது.
"இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு 7 மணியளவில் 60 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டார். காணொளியில் இருப்பது தான்தான் என்றும், தான் காட்டியது பொம்மைத் துப்பாக்கி என்றும் அவர் ஒப்புக் கொண்டார்," என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது, ஒரு வாகனம் சிக்னல் போடாமல் தனது காரை முந்திச் சென்றதால் அதிருப்தி அடைந்ததாகவும், பின்னர் அந்த வாகனத்தை முந்திச் சென்று மிரட்டியதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட வாகன ஓட்டுநர் தனது கார் கண்ணாடியைத் திறந்து கோபமாகப் பேசிய போது, சந்தேக நபர் தனது காரின் கண்ணாடியை இறக்கி இந்தத் துப்பாக்கி போன்ற பொருளைக் காட்டியதாக அவர் தெரிவித்தார்.
சோதனையில், கைது செய்யப்பட்ட நபருக்கு வேலை இல்லை என்பதும், அவர் மீது ஏற்கனவே ஐந்து குற்றப் பதிவுகள் இருப்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து இரண்டு பொம்மைத் துப்பாக்கிகள் மற்றும் அவரின் வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். “மேலும் அந்த நபரைத் தடுப்புக் காவலில் வைக்க இன்று விண்ணப்பிக்கப்படும். இந்த வழக்கு 1960-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் பிரிவு 36(1)-ன் கீழ் விசாரிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.


