Glamping With Pride’ நிகழ்ச்சி விளம்பரத்துக்கு எதிராக ஐந்து போலீஸ் புகார்கள் பதிவு
கோலாலம்பூர், ஜனவரி 10 — அடுத்த வாரம் கோல லங்காட்டில் நடைபெறவுள்ள கிளாம்பிங் வித் பிரைட் “Glamping With Pride” நிகழ்ச்சியின் விளம்பரங்கள் தொடர்பாக இதுவரை ஐந்து புகார்கள் போலீசில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசுப் கூறியதாவது, அந்த நிகழ்ச்சி சமூக பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் மற்றும் பொதுமரியாதைக்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என புகார்களில் குற்றச்சாட்டுகள் உள்ளன.“புகார்களில் ஒன்றை வியாழக்கிழமை மாலை சுமார் 6 மணிக்கு அளித்தனர்.
இந்த விவகாரம் குற்றவியல் சட்டம் பிரிவு 504 மற்றும் 1998ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 கீழ் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அவர் பொதுமக்கள் நல்ல ஒழுக்கமும் மதிப்பையும் காக்க வேண்டும் என்றும், பிறரை அவமதிக்கும் அல்லது பொது அமைதியை குலைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். “இத்தகைய செயல்கள் தொடர்ந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து தகவல் உள்ளவர்கள் விசாரணை அதிகாரி நூர் ஆயுனி அப்த் அசீஸை தொடர்பு கொண்டு உதவலாம்,” என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, மலேசிய இஸ்லாமிய அபிவிருத்தி துறை (ஜகீம்) தலைமை இயக்குநர் டத்துக் சிராஜுத்தீன் சுஹைமீ, இந்த நிகழ்வை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும், “இயற்கைக்கு முரணான பாலியல் செயற்பாடுகளை சாதாரணமாக்கும் எந்த முயற்சிகளையும் சகித்துக் கொள்ளமாட்டோம்” என்றும் தெரிவித்தார்


