ஷா ஆலாம், ஜனவரி 10 — சுபாங் ஜெயா மாநில சட்டமன்ற உறுப்பினர் மிசேல் இங் மேய் ஸீ, சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், பெர்சியாரான் சுபாங் மற்றும் USJ 7/3a சந்திப்பின் அருகே நடைபெறும் கேபிள் நிறுவல் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக போக்குவரத்து நெரிசல் உருவாகியிருப்பதை முன்வைத்து, ஒப்பந்தக்காரர்களை கடுமையாக கண்டித்ததாக காணப்பட்டார்.
DAP பிரதிநிதியான அவர், இப்பகுதியில் நடைபெறும் சாலைப் பணிகள் தாமதத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள தளப் பார்வை மேற்கொண்டார்.
வைரலான வீடியோவில், சாலை தோண்டப்பட்டு இருந்தாலும் பணிகள் தாமதமாகி கொண்டிருப்பதை காட்டும் காணொளியில் , திட்டத்துக்கு பொறுப்பான ஒப்பந்தக்காரர்களிடம் மிசேல் கேள்வி எழுப்பும் காட்சிகள் இடம்பெற்றன.
மேலும், அவர் ஒப்பந்தக்காரரை நோக்கி, “கணக்கு எங்கே போச்சு? கடலுக்கா போச்சு?” என்று கடுமையாக விமர்சித்ததும் காணப் பட்டது.
இது, பணி தாமதம் ஏற்படுவதற்கு தளத்தில் மணல் கொண்டு செல்ல லாரிகள் குறைவாக இருப்பதே காரணம் என்று ஒப்பந்தக்காரர் கூறியதற்கு பதிலாக அவர் கூறியதாகும்.
ஒப்பந்தக்காரர் மேலும், சில கேபிள்கள் திட்டத்தின் தொடக்க கட்டத்தில் கணக்கில் கொள்ளப் படாமல், தோண்டுதல் பணிகளுக்குப் பிறகே கண்டறியப்பட்டதால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறினார்.
“சாலையை மறிக்குமுன், அப்பகுதியில் எத்தனை கேபிள்கள் உள்ளன என்பதை சரியாக ஆய்வு செய்ய வேண்டாமா? அது தானே நீங்கள் எனக்கும் கவுன்சிலுக்கும் கொடுத்த உத்தரவாதம் ?” என்று அவர் கேட்டார்.
சிலாங்கூர் கூசெலை (Selangor Utility Corridor) கான்கிரீட் தடுப்புகள் இல்லாததற்காக குற்றம் சுமத்த முயன்றதற்கு அவர் ஒப்பந்தக்காரரை விமர்சித்து, தடுப்புகள் அமைத்தல் மற்றும் மாற்று திட்டங்களைத் தயாரித்தல் ஒப்பந்தக்காரர் பொறுப்பு என கூறினார்.
பணி மேலும் தாமதமானால், பள்ளிகள் திங்கட்கிழமை திறக்கும்போது போக்குவரத்து நெரிசல் மோசமடைய கூடும் என்றும், பள்ளி நேரங்களில் அந்தச் சந்திப்பை கடக்க மட்டும் 40 நிமிடங்கள் வரை ஆகக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
“இப்போது சாலை கேபிள் பணிக்காக மூடப்பட்டுள்ள நிலையில், நிலைமை இன்னும் மோசமடையலாம்,” என்றார் அவர்.
பணித் தாமதம் குறித்து கவுன்சிலுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்காததன் காரணத்தையும் அவர் கேள்வி எழுப்பினார். “மக்களின் நேரத்தை வீணாக்காதீர்கள். முன்பு நீங்கள் வைத்த உறுதிமொழியே என்னை கோபப்பட வைக்கிறது; ஆனால் இப்போது கதையே மாறிவிட்டது.
“ஒரு திட்டம் தாமதமானால், அதன் பாதிப்பை மக்கள் தான் அனுபவிக்க வேண்டியுள்ளது. அதனால் தான் நான் பேசுகிறேன்,” என்று அவர் கடுமையாக கண்டித்தார்.
மேலும், கர்ப்பிணியாக இருந்த போதும் தளத்துக்குச் சென்று நிலைமையை நேரில் பார்வையிட்ட மிசேலின் நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.


