ஷா ஆலம், ஜன 10 — சிலாங்கூர் அரசு மலேசியா விளையாட்டுகள் (சுக்மா) 2026 -ஐ கவனமாக ஏற்பாடு செய்து வருகிறது. பாதுகாப்பு மற்றும் அபாய மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில் முனைவோர் நிர்வாகக் குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹாலிமி தெரிவித்தார்.
சிலாங்கூரில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு இந்த சுக்மா பதிப்பை ஆகஸ்ட் மாதத்தில் திட்டமிட்டுள்ளதால், வானிலை உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் மாநில நிர்வாகம் கருத்தில் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
“சுக்மா செயலகம் மாநில பேரிடர் மேலாண்மை (அதிகாரிகளுடன்) தொடர்பில் இருந்து அவசர மாற்றங்களுக்கு தயாராக இருப்பதை உறுதி செய்யும். வெள்ள அபாயம் இல்லாத இடங்களைத் தேர்வு செய்யும்” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்த, சுக்மா தீச்சுடர் சுற்று ஓட்டம், சிலாங்கூர் இளைஞர் இயக்கத்தின் (PeBS) ஈடுபாட்டுடன் 12 உள்ளூர் கவுன்சில்களின் பகுதிகளை சுற்றும் என்று அவர் கூறினார்.
“சுக்மா சிலாங்கூர் 2026 தீச்சுடர் சுற்றுப்பயணம் சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கம் கொண்டது. பழைய மற்றும் புதிய விளையாட்டு வீரர்களின் பங்கேற்புடன், நடக்கும்” என்று நஜ்வான் நேற்று இரவு இங்கு PeBS பாராட்டு விழாவில் சந்தித்தபோது மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சிலாங்கூர் அணிக்கான ஒதுக்கீடு RM 10 மில்லியனாக உயர்த்தப் பட்டுள்ளது. இது புதிய விளையாட்டு வீரர்களின் திறனை வளர்த்தல், பயிற்சியை வலுப் படுத்துதல் மற்றும் மாநில அணியின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தலுக்கு முழுமையாக பயன்படுத்தப்படும்.
சுக்மா சிலாங்கூர் 2026 ஆகஸ்ட் 15 முதல் 24 வரை திட்டமிடப்பட்டுள்ளது. பாரா சுக்மா செப்டம்பர் 5 முதல் 14 வரை நடைபெறும். தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் முறையே சிப்பாங் இன்டர்நேஷனல் கார் பந்தய மையம் மற்றும் பெட்டாலிங் ஜெயா நகர கவுன்சில் (MBPJ) ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த சுக்மா பதிப்பில் 37 விளையாட்டுகளில் 474 நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
இதில் கிரிக்கெட், சிலம்பம் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் போன்ற ஏழு கூடுதல் விளையாட்டுகளும் அடங்கும்.
நிகழ்ச்சி சிலாங்கூரின் ஒன்பது மாவட்டங்களில் அதன் 12 உள்ளூர் கவுன்சில்களின் கீழ் நடைபெறும்.இதை தவிர நெகிரி செம்பிலான், நீலாய் தேசிய வெலோட்ரோமிலும் டிராக் சைக்கிளிங் நிகழ்வுகள், நடைபெறும்.
மாநில அரசு வசதிகள் மேம்பாடு மற்றும் சுக்மா தயாரிப்புக்கு RM 100 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது.
.


