புத்ராஜெயா, ஜன 9 - போலி அடையாள அட்டை (மைகார்ட்) பயன்பாடு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய பதிவு துறை (ஜேபிஎன்) கடுமையாக எச்சரித்துள்ளது.
இந்த செயலால் வெளிநாட்டவர்கள் அல்லது குற்றவாளிகள் மலேசிய குடிமக்களாக நடித்து, பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றி நாட்டிற்குள் மிக எளிதில் நுழைந்து விட அதிக வாய்ப்புண்டு.
அதுமட்டுமில்லாமல், இது விசாரணை மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேலும் சிக்கலாக்கும் என தேசிய பதிவு துறை தலைமை இயக்குநர் டத்தோ பட்ருல் ஹிஷாம் அலியாஸ் குறிப்பிட்டார்.
மேலும், போலி அடையாள அட்டை வைத்திருப்போர் அரசு உதவிகள், மானியங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை மற்றும் கல்வி போன்ற சலுகைகளை தகுதி இல்லாமல் பெற கூடிய வாய்ப்பும் உள்ளது.
“புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு (BSK) மூலம், மலேசியா காவல்துறை படை (PDRM), மலேசிய குடிவரவுத் துறை (JIM) மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) போன்ற பிற அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து தேசிய பதிவு துறை அடையாள அட்டை மோசடி கும்பல்களை எதிர்த்துப் போராட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
“போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்துதல் அல்லது வைத்திருத்தல் போன்ற குற்றங்களை புரியும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
விதிமுறை 25, PPN 1990இன் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது RM20,000க்கு மிகாமல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அடையாள அட்டை பதிவை மேற்கொள்ள எந்த முகவரையும் அல்லது பிரதிநிதியையும் ஒருபோதும் ஜேபிஎன் நியமித்ததில்லை,” என்று அவர் கூறினார்.


