லுமாஜாங், ஜனவரி 9- இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள செமெரு எரிமலை, வியாழக்கிழமை காலை வெடித்து, அதன் உச்சியிலிருந்து சுமார் 700 மீட்டர் உயரம் வரை எரிமலை சாம்பல் உமிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“வியாழக்கிழமை காலை ஏழு மணி பதினான்கு நிமிடத்திற்கு எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது. 4,376 மீட்டர் உயரமுள்ள உச்சியிலிருந்து, சாம்பல் மேகம் சுமார்700 மீட்டர் உயரம் வரை உயர்ந்தது,” என செமெரு கண்காணிப்பு நிலைய அதிகாரி சிகிட் ரியான் அல்ஃபியான் தெரிவித்தார். மேலும் இந்த வெடிப்பு நிலநடுக்க அளவுக் கருவியில் பதிவாகி, அதிகபட்சமாக 14 மில்லிமீட்டர் அதிர்வு அளவை எட்டியதுடன், சுமார் 120 விநாடிகள் நீடித்தது.
வியாழக்கிழமை முழுவதும் செமெரு எரிமலை நான்கு முறை வெடித்ததாக பதிவாகியுள்ளது. இந்த எரிமலை தற்போது மூன்றாம் நிலை எச்சரிக்கை நிலையில் தொடர்கிறது. எரிமலை ஆய்வு மற்றும் புவியியல் பேரிடர் தடுப்பு மையம், பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.


