கோலாலம்பூர், ஜன 8 — வருமான வகைப்பாட்டின் அடிப்படையில் பூடி மடாணி RON95 (BUDI95) ஒதுக்கீட்டைக் குறைப்பதன் மூலம் அரசாங்கம் மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாது என்று கருவூல பொதுச் செயலாளர் டத்தோ ஜோஹன் மஹ்மூட் மெரிக்கன் கூறினார்.
திட்டத்தின் வெற்றியை மதிப்பிடுவதற்காக BUDI95 இன் தொடக்கத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்று அவர் கூறினார்.
"ஒதுக்கீட்டை மாற்றுவதற்கு முன், அசாதாரண பயன்பாட்டைக் கண்டறிய முதலில் தரவை பகுப்பாய்வு செய்வோம்.
"இது நாட்டிற்கு ஒரு பெரிய மாற்றமாக இருக்கும், எனவே குறுகிய காலத்தில் இதை அதிகம் மாற்ற விரும்பவில்லை," என்று அவர் CGS சர்வதேச 18வது ஆண்டு மலேசியா கார்ப்பரேட் தினம் 2026இல் "வளர்ச்சி, நிதி மற்றும் உலகளாவிய சமநிலைப்படுத்துதல்" என்ற தலைப்பின் உரையாடலின் போது அவர் கூறினார்.
BUDI95 திட்டத்திற்கான 300 லிட்டர் ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, அரசாங்கத் தரவுகள் சராசரி நுகர்வு மாதத்திற்கு சுமார் 83 லிட்டர் என்றும், இத்திட்டத்திற்கு தகுதியுள்ளவர்களில் 90 சதவீதம் பேர் மாதத்திற்கு 200 லிட்டருக்கும் குறைவாகவே பயன்படுத்துவதாகவும் ஜோஹன் கூறினார்.
மிகவும் துல்லியமான வழிமுறைக்கான சில திட்டங்கள் இருந்தபோதிலும், வருமான அடிப்படையில் அரசாங்கம் இலக்கு மானியத் திட்டத்தை செயல்படுத்தாது என்று அவர் வலியுறுத்தினார்.
"முதலில் வெளிநாட்டினர் அல்லது மானிய விலையில் எரிபொருளைப் பயன்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து கசிவுகளை நீக்குவதில் கவனம் செலுத்துவோம். மேலும், நீண்ட விவாதத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக அதிகமான மலேசியர்கள் BUDI95 திட்டத்தை பயன்படுத்த அனுமதிப்போம்.


