கோலாலம்பூர், ஜனவரி 8: வடகிழக்கு பருவமழையால் பொதுவாக பாதிக்கப் படாத பகுதிகளிலும், கடுமையான வானிலை மாற்றங்கள் உருவாக சாதகமான வளிமண்டல நிலைமைகள் இருந்தால், இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழையின் போது பொதுவாக தீவிர வானிலையை அனுபவிக்கும் தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரை, சபா மற்றும் சரவாக் தவிர, இடியுடன் கூடிய மழை உருவாவதற்கு வளிமண்டல நிலைமைகள் சாதகமாக இருந்தால், இந்த மூன்று பகுதிகளின் மேற்கு கடற்கரையும் அத்தகைய வானிலையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியாவின் துணை தலைமை இயக்குநர் அம்பூன் டின்டாங் கூறினார் .
கடுமையான வானிலை நிகழ்வுகளை பாதிக்கும் முக்கிய காரணங்கள் காற்றின் திசை மற்றும் வேகம், அத்துடன் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காற்றின் குவிப்பு ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார். வடகிழக்கு பருவமழை காலத்தில், பருவமழை எழுச்சியின் இருப்பு ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை தொடர்ச்சியான மழையை ஏற்படுத்தும்,” என்று அவர் “Malaysia Petang Ini” நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
தொடர்ச்சியான மழை நீடித்தால் பேரிடர் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். பேரிடரை எதிர்கொள்ள மக்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்ற நினைவூட்டலாக, மெட்மலேசியா பொதுவாக இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கைகளை மூன்று தீவிர நிலைகளில் வெளியிடும் என்று அவர் கூறினார். “மேலும் பருவமழை மார்ச் மாதத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்க பட்டாலும், கன மழையை கொண்டு வரும் பருவமழை எழுச்சி எந்த நேரத்திலும் ஏற்படும் என்பதால் தொடர்ச்சியான கண்காணிப்பு தேவை,” என்று அவர் கூறினார்.
மெட் மலேசியா 24 மணி நேர வானிலை கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும், பருவமழை எழுச்சியின் அறிகுறிகள் கண்டறியப்பட்ட உடன் ஆரம்ப எச்சரிக்கைகளை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.


