புத்ராஜெயா, ஜனவரி 7- தொழிலாளர் நீதி கிடைப்பதை மேம்படுத்தவும், தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கான நேரத்தையும் செலவுகளையும் குறைக்கவும், நடமாடும் தொழிலாளர் நீதிமன்றத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ராமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தீபகற்ப மலேசிய தொழிலாளர் துறையின் கீழ், சிறப்பாக மாற்றி அமைக்கப்பட்ட மூன்று வாகனங்களுடன் இந்த முயற்சி தொடங்கும் என்றும், கிராமப்புற பகுதி மக்களுக்கு அல்லது தற்போதுள்ள தொழிலாளர் நீதிமன்ற வசதிகளை அணுகுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு சேவைகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
"இந்த திட்டத்திற்கு RM5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு முழுவதும் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும். ஆகஸ்ட் மாதத்திற்குள் இத்துறையின் செயல்பாட்டுத் திட்டத்தை இறுதி செய்யவும், நடமாடும் நீதிமன்றம் குறித்த தகவல்கள் பரவலாக சென்றடைவதை உறுதி செய்யவும் உதவும்," என்று இன்று இத்துறைக்கு வருகை தந்த பிறகு அவர் கூறினார்.
மேலும் தொழிலாளர்கள் நீதிமன்றம் எங்கு அமையும் என்பதையும், சேவைகள் எவ்வாறு நகர்த்தப்படும் என்பதையும் அறிவார்கள் என்றார். அனைத்தும் திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் திறம்பட செயல்படுத்த நேரம் எடுக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.
"நடமாடும் தொழிலாளர் நீதிமன்றம், குறிப்பாக கிராமப்புற மற்றும் உட்புற பகுதிகளில், தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் நேரத்தையும் செலவுகளையும் மிச்சப்படுத்தும் அதே வேளையில், மக்கள் நட்பு முறையில் தொழிலாளர் நீதி கிடைப்பதை மேம்படுத்தும்," என்று அவர் தெரிவித்தார். தொழிலாளர் நீதிமன்றங்களில் டிஜிட்டல் பதிவு அமைப்புகளை நிறுவுவதன் மூலம் அவற்றை வலுப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ரமணன் கூறினார்.
தேசிய டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, டிஜிட்டல் பதிவு அமைப்பு விசாரணைகளை விரைவுபடுத்தும், வெளிப் படைத்தன்மையை மேம்படுத்தும் மற்றும் தொழிலாளர் வழக்கு பதிவுகள் மிகவும் திறமையாக நிர்வகிக்கப் படுவதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக தரவு பதிவு முறையை மாற்றியமைக்க, ஒருங்கிணைந்த தொழிலாளர் மேலாண்மை அமைப்பையும் அமைச்சு உருவாக்கி வருகிறது. நவம்பர் 2025 முதல் நவம்பர் 2028 வரை 36 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் இந்த RM9.26 மில்லியன் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் AI சாட்போட் ஆகியவை உள்ளடங்கும்.
2026 முதல் 2028 வரை கட்டம் கட்டமாக அறிமுகப் படுத்தப்படும் இந்த அமைப்பு, செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் மற்றும் தொழில்துறை வீரர்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும் என்று ராமணன் தெரிவித்தார்.
"தொழில்துறை பிணக்குகளை தீர்க்க அல்லது நீதி கிடைப்பதை எளிதாக்கவே இங்கு இருக்கிறோம், எவரையும் விரக்தியடையச் செய்ய அல்ல. ஒவ்வொரு செயல்முறைக்கும் செலவுகள் உண்டு. இந்த முயற்சி அனைவருக்கும் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவருக்கும் செலவுகளைக் குறைக்கிறது," என்று அவர் கூறினார். தொழிலாளர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ள பயணச் செலவுகளையும் வருமான இழப்பையும் ஏற்கச் செய்து விட்டு, ஊதியத்தை உயர்த்துவது நியாயமற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


