ரபாட், ஜன 6- ஆப்பிரிக்கா கிண்ணக் காற்பந்துப் போட்டி (AFCON) காலிறுதிக்கு முந்தைய சுற்றில், எகிப்து அணி பெனின் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் கூடுதல் நேரத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 124ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் மொஹமட் சலா கோல் அடித்து இந்த வெற்றியை உறுதி செய்தார்.
இரண்டாம் பாதியில் மர்வான் அட்டியா எகிப்து அணியை முன்னிலைப்படுத்தினார். உலகத் தரவரிசையில் சாதனை படைத்த 7 முறை AFCON வெற்றியாளர்களான எகிப்து அணியை விட 58 இடங்கள் கீழே உள்ள பெனின் அணிக்காக ஜோடெல் டோஸ்ஸு சமன் செய்தார்.
கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் யாசர் இப்ராஹிம் தலையால் முட்டி எகிப்து அணியை மீண்டும் முன்னிலைப்படுத்தினார்.
பின்னர், சலா தற்காப்பு வீரர்களைத் தாண்டி வந்து, பெனால்டி பகுதிக்கு வெளியே இருந்து கோல்கீப்பர் மார்செல் டான்ட்ஜினோவைத் தாண்டி பந்தை வலைக்குள் தள்ளி தனது 10வது AFCON கோலைப் பதிவு செய்தார்.
தனது கோல்களால் லிவர்பூல் அணி பல கோப்பைகளை வெல்ல உதவிய சலா, இருமுறை இரண்டாம் இடம் பிடித்திருந்த நிலையில், தனது முதல் AFCON வெற்றியாளர் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார்.
சாதனை படைத்த 7 முறை சாம்பியன்களான எகிப்து அணி, சனிக்கிழமை நடைபெறும் காலிறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன்களான ஐவரி கோஸ்ட் அல்லது புர்கினா ஃபாசோவை எதிர்கொள்ள அகாதீரிலேயே தங்கியிருக்கும்.


