மென்செஸ்டர், ஜன 6- இங்கிலாந்து பிரிமியர் லீக் ஜாம்பவான் அணியான மென்செஸ்டர் யுனைடெட், அதன் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் நிர்வாகியான ரூபன் அமோரிமை 14 மாதங்களுக்குப் பிறகு பணிநீக்கம் செய்துள்ளது.
போர்ச்சுகலைச் சேர்ந்த அந்தப் பயிற்சியாளரின் பணிநீக்கம், அண்மைய காலமாக அமோரிமிற்கும் அணியின் நிர்வாகத்திற்கும், குறிப்பாக மென்செஸ்டர் யுனைடெட் கால்பந்து இயக்குநர் ஜேசன் வில்காக்ஸிற்கும் இடையே அதிகரித்து வந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.
பிரிமியர் லீக் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள ரெட் டெவில்ஸ் அணி, ரூபன் அமோரிம் மென்செஸ்டர் யுனைடெட் தலைமைப் பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.
"மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கிளப் தலைமை கனத்த மனதுடன் முடிவெடுத்துள்ளது.
"இது பிரிமியர் லீக் போட்டியை முடிந்தவரை உயர்ந்த இடத்தில் முடிக்க அணிக்கு சிறந்த வாய்ப்பை வழங்கும்.
"கிளப்பிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அமோரிமிற்கு கிளப் நன்றி தெரிவித்துக் கொள்கிறது, மேலும் அவரது எதிர்காலத்திற்கு வாழ்த்துகிறது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 18 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளர் டாரன் ஃபிளெட்சர், இந்த புதன்கிழமை பர்ன்லி அணிக்கு எதிரான யுனைடெட் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்பார்.


