சபாக் பெர்ணம், ஜன 6 - சபாக் பெர்ணமில், கழிவு மேலாண்மையை மேம்படுத்த RM6.4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 19 புதிய லாரிகளை KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) வாங்கியுள்ளது.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக மாவட்டத்தில் செயல்பட்டு வந்த KDEBWM, சபாக் பெர்ணம் நகராண்மை கழகத்துடன் (MDSB) ஏழு ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் இரண்டாம் கட்டத்தில் நுழைவதை இந்த நடவடிக்கை குறிக்கிறது என்று அதன் நிர்வாக இயக்குனர் டத்தோ ராம்லி முகமட் தாஹிர் கூறினார்.
மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள கழிவு மேலாண்மை சேவையை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் முழுவதும் KDEBWM இன் தொடர்ச்சியான மேம்பாடுகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
சபாக் பெர்ணமில் திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடுகளில் செயல்பாட்டு மண்டலங்களை 16 முதல் 19ஆக விரிவுபடுத்துவதும் அடங்கும். இது மாவட்டத்தின் கிட்டத்தட்ட 120,000 குடியிருப்பாளர்கள் மற்றும் 50,000 வளாகங்களுக்கு மிகவும் முறையான திடக்கழிவு மேலாண்மையை வழங்கும்.
"சிலாங்கூரின் வண்ணங்களை சித்தரிக்கும் 19 புதிய சிவப்பு மற்றும் மஞ்சள் லாரிகளை ஒப்படைப்பது, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், சபாக் பெர்ணமில் கழிவு தொடர்பான பிரச்சனைகளை முழுமையாகவும் விரிவாகவும் தீர்க்கவும் உதவும் என்று நம்புகிறோம்," என நேற்று சுங்கை பெசார் மைதானத்தில் நடந்த லாரி ஒப்படைப்பு விழாவில் ராம்லி கூறினார்.
"மேலும், உடனடி நடவடிக்கை எடுக்க, படங்கள் மற்றும் சரியான இடங்களுடன் KDEBWMஇன் முகநூல், வாட்ஸாப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் தூய்மை குறித்த புகார்களை மக்கள் தெரிவிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்," என்று அவரந்தெரிவித்தார்.


