லண்டன், ஜன 5 — குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சனையை சமாளிக்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் துரித உணவு விளம்பரங்களுக்கு ஐக்கிய இராச்சியம் (UK) நாடு தழுவிய அளவில் தடையை அமல்படுத்தியுள்ளது.
கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை (HFSS) அதிகமாக உள்ளவை என வகைப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்களை உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு முன் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தவோ அல்லது எந்த நேரத்திலும் இணைய கட்டண விளம்பரம் மூலம் விளம்பரப்படுத்தவோ முடியாது என்று அனடோலு அஜான்சி தெரிவித்துள்ளது.
"இதனால், தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் ஆரோக்கியமற்ற உணவு விளம்பரங்கள் அதிகமாக ஒளிப்பரப்பப்படுவதிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள்" என்று சுகாதாரத் துறை திங்களன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறைகள் உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கையை 20,000ஆகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்தில் 22.1 சதவீதத் தொடக்கப்பள்ளி குழந்தைகள் அதிக எடை அல்லது உடல் பருமனுடன் வாழ்கின்றனர். அவர்கள் பள்ளியை விட்டு வெளியேறும் போது இது 35.8 சதவீதமாக உயரும்.
இந்த நடவடிக்கை ஆரோக்கியமற்ற உணவுகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்வதை குறைப்பதோடு பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கும் என பொது சுகாதார அமைச்சர் ஆஷ்லே டால்டன் கூறினார்.


