பந்திங், ஜன 5- சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கோலா லங்காட் மாவட்டத்தின் கோலா லங்காட் நகராண்மை கழகத்தின் நகராண்மை கழக உறுப்பினர்களாக 12 பேர் நியமிக்கப்பட்டனர். கோலா லங்காட் நகராண்மை கழகத்தின் தலைவர் துவான் முஹம்மட் ஹஸ்ரி நோர் முஹம்மட் முன்னிலையில் அந்த 12 பேரும் பதவி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்ட நகராண்மை கழக உறுப்பினர்கள் அனைவரும் மாவட்ட ரீதியில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போரின் நலனைப் பாதுகாப்பதோடு மாவட்ட வளர்ச்சிக்கும் தங்களது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வருவதாக அவர்கள் உறுதி அளித்தனர்.
இன்றைய பதவி உறுதி மொழி சடங்கில் அமானா கட்சியைப் பிரதிநிதித்து ஐவரும் ஜசெக கட்சியைப் பிரதிநிதித்து எழுவரும் கோலா லங்காட் நகராண்மைக்கழக உறுப்பினர்களாக நியமனம் பெற்றனர். இதில் விடுபட்ட 11 பேர் மற்றொரு நாளில் பதவி உறுதிமொழியை எடுத்து கொள்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்தார். பிறகு, அவர் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக நியமனம் பெற்ற அனைவருக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தியர்களைப் பிரதிநிதித்து நகராண்மைக் கழக உறுப்பினர்களாக நடேசன் சுப்ரமணி (DAP), இளையராஜா பழனிச்சாமி (DAP), எலிசா சாம்சன் இமானுவேல் (AMANAH ) ஆகிய மூவரும் நியமனம் பெற்றனர்,
கோலா லங்காட் நகராண்மைக்கழக உறுப்பினர்களாக நியமனம் பெற்ற 12 பேரின் பதவிகாலம் ஜனவரி 2026 தொடங்கி வரும் டிசம்பர் 2027 வரை ஈராண்டுகள் நீடிக்கும் என்று முகமட் ஹஸ்ரி கூறினார்.


