கோலாலம்பூர், ஜனவரி 5 — நடப்பு பள்ளி அமர்வின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மழலையர் பள்ளி பாடத்திட்டம், முழுமையான ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆறு முக்கிய கற்றல் பகுதிகளை மையமாகக் கொண்டிருக்கும் என்று கல்வி அமைச்சர் பட்லினா சீடேக் கூறினார்.
சமூக-உணர்ச்சி வளர்ச்சி, உடல் வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு; மொழி மற்றும் எழுத்தறிவு; ஆன்மீகம், நெறிகள் மற்றும் குடியுரிமை; படைப்பாற்றல் மற்றும் அழகியல்;அறிவாற்றல் வளர்ச்சி ஆகியவையே அந்த ஆறு முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகள் என்று அவர் தெரிவித்தார்.
சமூக-உணர்ச்சித் துறையானது குழந்தைகளின் உணர்ச்சிகளை அடையாளம் கண்டு நிர்வகிக்கும் திறனை வளர்ப்பதற்கும், மற்றவர்களுடனும் சுற்றுப்புறத்துடனும் நேர்மறையான உறவுகளை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது என்று அவர் கூறினார்.
"உடல் வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வைப் பொறுத்தவரை, ஆரோக்கியமான ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உட்பட சுகாதார விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இனப்பெருக்க மற்றும் சமூக சுகாதாரக் கல்வியும் (PEERS) இதில் இணைக்கப்பட்டுள்ளது," என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
மொழி மற்றும் எழுத்தறிவு கூறு, குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு மற்றும் மொழித் திறன்களைக் கற்றுக்கொள்வதோடு, வாசிப்பில் ஆர்வத்தை வளர்ப்பதன் மூலம் தகவல் தொடர்பு திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், ஆன்மீகம், நெறிகள் மற்றும் குடியுரிமைத் துறையானது இஸ்லாமியக் கல்வி, ஒழுக்கக் கல்வி மற்றும் குடியுரிமைக் கல்வி என மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
"இஸ்லாமியக் கல்வியில், முஸ்லிம் குழந்தைகளுக்கு அடிப்படை மத அறிவு, நெறிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் உள்ள நடைமுறைகள், ஜாவி எழுத்தின் அடிப்படைகள் உட்பட கற்பிக்கப்படும்," என்று அவர் கூறினார். குடியுரிமைக் கல்வி, உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பது, தேசபக்தியை வளர்ப்பது மற்றும் குழந்தைகள் தங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் நல்வாழ்வுக்குப் பங்களிக்க ஊக்குவிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
படைப்பாற்றல் மற்றும் அழகியல் துறையில், குழந்தைகள் தங்கள் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து ரசிப்பதற்கும், கலைகள், இசை, மற்றும் நாடகம் மூலம் கற்பனை மற்றும் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று அவர் கூறினார். புதிய பாடத்திட்டம் ஆரம்ப வயதிலிருந்தே பன்முகத்தன்மை கொண்ட, சமச்சீரான மற்றும் உலகளவில் போட்டித்தன்மை கொண்ட மாணவர்களை உருவாக்க உதவும் என்று தனது நம்பிக்கை தெரிவித்தார்.


