ஷா ஆலம், ஜனவரி 2 –நேற்று முதல் அமலுக்கு வந்த இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025 (ONSA), நாட்டின் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், பயனர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை இணையத் தீங்கிலிருந்து பாதுகாப்பதிலும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இணைய அபாயங்களை நிர்வகிப்பதற்கான தெளிவான பொறுப்புகளை ONSA உரிமம் பெற்ற சேவை வழங்குநர்களுக்கு வழங்குகிறது. இதில் அச்சுறுத்தல் நிலைக்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல், குழந்தைகளுக்குச் சிறப்புப் பாதுகாப்பு வழங்குதல், மற்றும் பயனர்களுக்குப் புகாரளிக்கும் மற்றும் உதவி வழங்கும் வழிமுறைகளை அமைத்தல் ஆகியவை அடங்கும்.
எஸ்.கே.எம்.எம்-இன் கூற்றுப்படி, இந்தச் சட்டம் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-இன் கீழ் செயலி சேவை வழங்குநர்கள், உள்ளடக்கச் செயலி சேவை வழங்குநர்கள் மற்றும் பிணைய சேவை வழங்குநர்கள் ஆகியோருக்குப் பொருந்தும் என்றும் தனிப்பட்ட பயனர்களுக்கு இது பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டது.
"ONSA AKM1998-இன் பிரிவு 46A-இன் 'Deeming' ஏற்பாட்டுடன் இணைந்து செயல்படுகிறது. இதுவும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் உரிமக் கட்டண அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் சமூக ஊடகத் தளங்கள் தற்போதுள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் மலேசியச் சட்டங்களுக்கு உட்பட்டவையாகின்றன," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அணுகுமுறை, பெரிய அளவிலான இணையத் தளங்கள் மலேசியாவில் பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், கணக்குக் கூறக்கூடிய வகையிலும் செயல்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் படிப்படியான ஒழுங்குமுறையின் ஒரு பகுதியாகும் என்று எஸ்.கே.எம்.எம் விளக்கியது.
அதே நேரத்தில், சேவை வழங்குநர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், அமலாக்க முகவர் நிலையங்கள், சமூக அமைப்புகள் மற்றும் சமூகத்துடன் இணைந்து, பாதுகாப்பான மற்றும் மீள்திறன் கொண்ட டிஜிட்டல் சூழலியலை உருவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளது.
ONSA தொடர்பான மேலதிக தகவல்களை எஸ்.கே.எம்.எம்-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளமான mcmc.gov.my-இல் பெறலாம்.


