பாரிஸ், ஜன 2: 15 வயதிற்குக் குறைவானவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், உயர்நிலைப் பள்ளிகளில் கைப்பேசிகளை உபயோகிப்பதையும் தடை செய்யும் மசோதாவை பிரான்ஸ் பரிசீலிக்கவுள்ளதாக, ``Franceinfo`` ஒளிபரப்பை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜான்சி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 8 அன்று பிரெஞ்சு மாநில கவுன்சில் (French Council of State) இந்த மசோதாவை ஆய்வு செய்ய உள்ளது. இந்த மசோதா, 15 வயதிற்குக் குறைவானவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதையும், புதிய கல்வியாண்டு தொடங்கும் செப்டம்பர் 2026 முதல் உயர்நிலைப் பள்ளிகளில் கைப்பேசிகள் பயன்படுத்துவதையும் தடை செய்வதை உள்ளடக்கியது.
அரசுத் தரப்பு வட்டாரங்களின் கூற்றுப்படி, முந்தைய முயற்சி தோல்வியடைந்ததைப் போல அல்லாமல், இந்த மசோதா ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களுக்கு இணங்க இருப்பதை உறுதி செய்வதற்காகக் கவனமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2026–2027 கல்வியாண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் கைப்பேசி பயன்பாட்டு தடையை விரிவுபடுத்த விரும்புவதாகவும், 15 அல்லது 16 வயதிற்குக் குறைவானவர்களுக்கு சமூக ஊடகத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த நவம்பரில், ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்திருந்தார்.
2018ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், குழந்தைகள் மழலையர் பள்ளி முதல் நடுநிலைப் பள்ளிகள் வரை கைப்பேசி தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இருப்பினும், அதை முழுமையாக அமல்படுத்துவது சில நேரங்களில் கடினமாக இருந்து வருகிறது.
பல கல்வி ஆய்வுகள், இளம் வயதினரின் சமூக ஊடகப் பயன்பாடு மனநலத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்துகளையும், இளையோரிடம் கைப்பேசிகள் ஏற்படுத்தும் கவனச் சிதறல் அபாயங்களையும் ஆவணப்படுத்தியுள்ளன.


