பெக்கான், ஜனவரி 2: நெனாசி, கம்போங் தஞ்சோங் கடற்கரையில் கடந்த செவ்வாய்க்கிழமை விண்வெளியில் இருந்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அந்தப் பொருள் மாலை 5 மணியளவில் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று பெக்கான் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டன் முகமட் சைய்டி மாட் சின் கூறினார்.
"ஆரம்பக்கட்ட விசாரணையில், அந்தச் சிதைவுப் பொருள் விண்வெளியில் இருந்து கடலில் விழுந்து, பின்னர் நீரோட்டத்தால் நெனாசி கடற்கரைக்கு அடித்து வரப்பட்டதாக நம்பப்படுகிறது," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். 4.26 மீட்டர் நீளமும் 3.64 மீட்டர் அகலமும் கொண்ட அந்தப் பொருள் நேற்று மலேசிய அணுசக்தித் துறை அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு, எந்தவித கதிர்வீச்சும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.
பாதுகாப்பு நோக்கங்களுக்காக, அந்தப் பொருள் நெனாசி காவல் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.
மேலும் நெனாசி காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்தப் பொருளைச் சுற்றி காவல்துறை பாதுக்காப்பு பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. நூற்றுக்கணக்கான கிலோகிராம் எடை கொண்டதாகக் கருதப்படும் அந்தச் சிதைவுப் பொருள் சிப்பிகளால் மூடப்பட்டு, அதன் சில பகுதிகள் உடைந்தும் சேதமடைந்தும் காணப்பட்டன.


