ஷா ஆலாம், டிச 31- சிலாங்கூர் காவல்துறை , நவம்பர் 1 முதல் டிசம்பர் 30, 2025 வரை செயல்படுத்தப்பட்ட 70 விழுக்காடு பிடிஆர்எம் சம்மன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் RM19.51 மில்லியன் போக்குவரத்து அபராத சம்மன் வசூலை பதிவு செய்துள்ளது.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து COPS போக்குவரத்து சாவடிகளிலும் இந்த இரண்டு மாத கால திட்டத்தின் கீழ் மொத்தம் 258,345 சம்மன்கள் தீர்க்கப்பட்டன.
மொத்த எண்ணிக்கையில், 125,759 சம்மன்கள் சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 257 இன் கீழ் உள்ள குற்றங்கள் சம்பந்தப்பட்டவை. இதன் மூலம் RM11.49 மில்லியன் வசூலானது.
அதேவேளை, பிரிவு 170A இன் கீழ் உள்ள 132,586 சம்மன்கள் RM8.01 மில்லியன் வசூலை பதிவு செய்தன,” என்று அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், மாவட்ட வாரியாக அதிகபட்ச வசூல் கிள்ளான் தெற்கு மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) RM2.7 மில்லியன் எனப் பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயா ஐபிடி (RM2.1 மில்லியன்) மற்றும் காஜாங் ஐபிடி (RM1.7 மில்லியன்) ஆகியவை உள்ளன. மின்-பணம் செலுத்துதல் மூலம் RM9.45 மில்லியன் வசூலான நிலையில், பணப் பரிமாற்றத்துடன் ஒப்பிடுகையில் (RM 10.05 மில்லியன்), டிஜிட்டல் தொழில் நுட்பத்தை மக்கள் ஏற்றுக் கொள்வதில் நேர்மறையான போக்கைக் கண்டதாக ஷாசெலி கூறினார்.
“இந்த வளர்ச்சி, நாட்டின் டிஜிட்டல் மாற்ற நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, சமூகம் இப்போது வேகமான மற்றும் திறமையான பரிவர்த்தனைகளை அதிகம் நாடுகிறது என்பதை நிரூபிக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.இந்த அபராதக் குறைப்பு முயற்சி மக்களின் நிதிச் சுமையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், சிலாங்கூரில் உள்ள அனைத்து சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக சாலை விதிகளை பின்பற்றுவதில், விழிப்புணர்வை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது என்று அவர் மேலும் கூறினார்


