கோலாலம்பூர், டிச 31- 2026ஆம் ஆண்டில் தெற்கு மற்றும் வடக்கு வழித்தடங்களில் 12 மின்சார ரயில் சேவைகள் (ETS3) முழுமையாகச் செயல்படத் தொடங்கிய பிறகு, 1.2 மில்லியன் பயணிகள் அவற்றைப் பயன்படுத்துவார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது.
மலாயா ரயில்வே லிமிடெட் (KTMB) தலைமைச் செயல் அதிகாரி அஃப்சார் சக்காரியா கூறுகையில், கோலாலம்பூர்-ஜொகூர் பாரு வழித்தடத்திற்கு 2,600 பேர் உட்பட ஒரு நாளைக்கு சராசரியாக 3,400 பயணிகளை KTMB இலக்காகக் கொண்டுள்ளது.
ஜொகூர் பாரு-பட்டர்வர்த் மற்றும் ஜொகூர் பாரு-படாங் பெசார் வழித்தடங்களை ஒரு நாளைக்கு சராசரியாக 400 பயணிகள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப் படுவதாகவும் அவர் தெரிவித்தார்."இந்த மாதம் முதல், KTMB தினமும் எட்டு ETS3 சேவைகளை இயக்குகிறது, அதாவது நான்கு ஏறுமுக மற்றும் நான்கு இறங்குமுகப் பயணங்கள்."
அடுத்த ஆண்டு, இந்தச் சேவை ஜொகூர் பாருவில் இருந்து பட்டர்வர்த் மற்றும் படாங் பெசார் வரை நீட்டிக்கப்படும், ஒவ்வொன்றிற்கும் இரண்டு சேவைகள் வழங்கப்படும்.இதன் மூலம் மொத்தமாக 12 சேவைகள் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது," என பெர்னாமாவிடம் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் உள்ள வூட்லண்ட்ஸ் நோர்த் நிலையத்தையும் ஜொகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகர் நிலையத்தையும் இணைக்கும் RTS Link, ETS3 மற்றும் தெற்குப் பகுதியின் பயணிகள் ரயில் சேவைகள் உட்பட பொதுப் போக்குவரத்து பயன்பாடு அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"RTS Link செயல்படத் தொடங்கியதும், சிங்கப்பூரிலிருந்து அதிக பயணிகள் ETS3 மற்றும் பயணிகள் ரயில் சேவைகளை மலேசியாவின் மற்ற நகரங்களுக்கு செல்லும் இணைப்புப் பயணமாக பயன்படுத்துவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறினார்.


