கோலாலம்பூர், டிச 31- 2026 பிப்ரவரி 1 அன்று அறிவிக்கப்பட்ட தைப்பூசம் மற்றும் கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு தனியார் துறை பொது விடுமுறையை அனுபவிக்கும்.
கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் கூட்டரசு பிரதேசங்களில் உள்ள தனியார் துறை முதலாளிகள் கூட்டரசுப் பிரதேச தின விடுமுறையை கட்டாயம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
இந்த வர்த்தமானி அறிவிப்பு 1955ஆம் ஆண்டு வேலைச் சட்டம் [சட்டம் 265] பிரிவு 60D(1)(a)(iii)-க்கு இணங்க உள்ளது என்றும், அதை மாற்ற முடியாது என்றும் அத்துறை கூறியது.கூட்டரசுப் பிரதேச தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், ஞாயிற்றுக் கிழமையை ஊழியர்களின் வாராந்திர ஓய்வு நாளாக நிர்ணயித்துள்ள முதலாளிகள் அடுத்த வேலை நாளான திங்கட்கிழமைக்கு மாற்று விடுமுறை வழங்க வேண்டும்.
அத்துடன், தைப்பூச தினத்தை மீதமுள்ள ஆறு பொது விடுமுறை நாட்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்த முதலாளிகள், சம்பந்தப்பட்ட இரு பொது விடுமுறை நாட்களும் ஒரே நாளில் வருவதால், அடுத்த வேலை நாளான செவ்வாய்க்கிழமைக்கு மாற்று விடுமுறை வழங்க வேண்டும் என்று இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாளிகள் ஊழியர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு வேறு எந்த நாளையும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக வழங்கலாம், இது 1955ஆம் ஆண்டு வேலை சட்டம் பிரிவு 60 D(1A)-இன் கீழ் வழங்கப் பட்டுள்ளது என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.
பொது விடுமுறை நாளில் வேலை செய்ய பணிக்கப்படும் ஊழியர்கள், அதே சட்டத்தின் பிரிவு 60 D(3)-இன் கீழ் நிர்ணயிக்கப் பட்டுள்ளபடி, பொது விடுமுறைக்கான ஊதிய விகிதத்தைப் பெற தகுதியுடையவர்கள் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.


