கோலாலம்பூர், டிச 31 - எதிர்வரும் ஜனவரி 1 முதல் தலைநகரை சுற்றியுள்ள பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ அல்லது குப்பை வீசினாலோ, அதிகபட்சம் 2,000 ரிங்கிட் வரை அபராதமும் 6 மாதங்களில் 12 மணி நேரத்திற்கும் மேல் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் உத்தரவும் விதிக்கப்படும்.
Visit Malaysia 2026 திட்டத்தை முன்னிட்டு, நகரம் முழுவதும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் கண்காணிப்பை அதிகரிக்கவுள்ளது.
இதில் குறிப்பாக சுற்றுலா பயணிகள் வருகைப்புரியும் பகுதிகளில் எச்சில் துப்புதல் மற்றும் சிகரெட் துண்டுகள், பாட்டில்கள் போன்ற குப்பைகளை வீசும் செயல்களைத் தடுக்க நடவடிக்கைகள் தொடர்ந்து அமல்படுத்தப்படவுள்ளது.
மேலும், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து 2,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும். இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கம் மக்கள் தூய்மையைக் கடைப்பிடிக்க பழக்கப்படுத்துவதே ஆகும் என்று டி.பி.கே.எல். சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் டாக்டர் நோர் ஹலிசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
அதே நேரத்தில் உணவகங்கள் மற்றும் பொது கழிப்பறைகளில் தூய்மை கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுவரை மொத்தம் 7,450 உணவகங்கள் பரிசோதனையில் உள்ள நிலையில் உணவு மாசுபாடு அல்லது எலிகள், கரப்பான் போன்றவை இருந்தால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


