கோலாலம்பூர், டிச 30- கடந்த வாரம் வெளியிடப்பட்ட அரசிதழின்படி, 150 நீதிபதிகளுக்கும் எதிர்வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் சம்பள உயர்வு அமலுக்கு வரும்.
டிசம்பர் 24ஆம் தேதி வெளியிடப்பட்ட நீதிபதிகள் ஊதிய விதிமுறைகள் 2025இன் கீழ், தலைமை நீதிபதியின் மாதச் சம்பளம் முன்பு RM36,000 ஆக இருந்த நிலையில் RM46,800 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவரின் சம்பளம் RM31,500 ஆக இருந்த நிலையில் RM40,950 ஆகவும் உயர்த்தப் படுகிறது.
மலாயா தலைமை நீதிபதி (கே.எச்.எம்) மற்றும் சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி (கே.எச்.எஸ்.எஸ்) ஆகியோரின் சம்பளம் முன்பு முறையே RM30,500 மற்றும் RM30,000 ஆக இருந்த நிலையில், RM39,650 ஆக ஒரே சீராக்கப்பட்டுள்ளது.
கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் இனி RM37,050 (RM28,500இலிருந்து உயர்வு), மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் RM35,750 (RM27,500இலிருந்து உயர்வு) மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் RM34,450 (RM26,500இலிருந்து உயர்வு) பெறுவார்கள்.
நீதிபதிகளுக்கு வழங்கப்படும் மாதப்படி மற்றும் இதர சலுகைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தபோது, நிதி அமைச்சின் பொறுப்பையும் வகிக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அனைத்து நீதிபதிகளுக்கும் 30 விழுக்காடு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
நீதிபதிகளின் சம்பளம் கடைசியாக 2015ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டதாக அவர் கூறினார்.
மற்ற பொதுச் சேவைத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஆண்டுச் சம்பள உயர்வு நீதிபதிகளுக்குக் கிடைப்பதில்லை என்பதையும் அவர் விளக்கினார்.



