கங்கார், டிச 30- இந்த ஆண்டு முழுவதும் பெர்லிஸ் மாநிலத்தில் நடத்தப்பட்ட 80 வேளாண் மடாணி விற்பனைத் திட்டங்கள் மற்றும் விவசாய தொழில்முனைவோர் தயாரிப்பு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் 13,000க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் தங்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களைப் பெறும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்.
விவசாயிகள் அமைப்பு வாரியம் (LPP) மற்றும் வட்டார விவசாயிகள் அமைப்பு (PPK) இணைந்து ஏற்பாடு செய்த இந்தத் திட்டங்கள், சந்தை விலையை விடக் குறைந்த விலையில் பொருட்களை வழங்கின.
பெர்லிஸ் மாநில விவசாயிகள் அமைப்பு வாரியத்தின் (LPP) இயக்குநர் ரோஷிடா அஹ்மட் கூறுகையில், இந்தத் திட்டங்கள் பார்வையாளர்களுக்கு மட்டுமல்லாமல், உள்ளூர் தொழில்முனைவோர் தங்கள் வேளாண் உணவுப் பொருட்களை LPP பிராண்டின் கீழ் அறிமுகப்படுத்த ஒரு தளமாகவும் அமைந்தன.
இந்த ஆண்டு முழுவதும், இத்திட்டங்கள் மூலம் கிட்டத்தட்ட RM600,000 விற்பனை மதிப்புப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 300க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் இதில் பங்கேற்றனர்.
பெர்லிஸ் மாநில LPP தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வேளாண் மடாணி மெகா விற்பனை மற்றும் விவசாய தொழில்முனைவோர் தயாரிப்பு மேம்பாட்டு நிகழ்ச்சியின் போது அவர் ஊடகங்களைச் சந்தித்தார்.
இந்த வேளாண் மடாணி மெகா விற்பனைத் திட்டம் 3,000 குடும்பங்களுக்குப் பயனளித்ததுடன், RM50,000 விற்பனை மதிப்பை எட்டியது.
வழங்கப்பட்ட பொருட்களில் புதிய மாட்டிறைச்சி, மீன், அன்றாட அத்தியாவசியப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் நாற்றுகள் உள்ளிட்ட விவசாயப் பொருட்கள், அத்துடன் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (IKS) தயாரிப்புகள் ஆகியவை அடங்கும்.


