ஈப்போ, டிச 30- பெர்சத்து கட்சியின் தேசிய உதவித் தலைவரான டத்தோஶ்ரீ அஹ்மட் ஃபைசால் அசுமு, பெரிக்காத்தான் நேஷனல் அரசியல் கூட்டணியின் பேராக் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.
"பெரிக்காத்தான் நேஷனல் தலைவராக டான் ஶ்ரீ முஹிடின் யாசின் பதவி விலகும் முடிவை நான் கவனத்தில் கொள்கிறேன்.
மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரம் தலைவருக்கு உள்ளது என்பதை மதித்து, பெரிக்காத்தான் நேஷனல் பேராக் தலைவராக எனது பதவியை 2026 ஜனவரி 1 முதல் ராஜினாமா செய்வதாக இதன் மூலம் அறிவிக்கிறேன் என்று அவர் கூறினார்.
இந்த பொறுப்பை நான் வகித்த காலத்தில் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கைக்காக பெரிக்காத்தான் நேஷனல் பேராக்-கின் அனைத்துத் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, 2026 ஜனவரி 1 முதல் பெரிக்காத்தான் நேஷனல் தலைவராகப் பதவி விலகுவதை முஹிடின் உறுதிப்படுத்தினார்.
இதேபோல், டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் மற்றும் சிலாங்கூர் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவிகளை ராஜினாமா செய்தார்.
புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் சஹ்ருடின் ஜமால், ஜோகூர் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.


