கோலாலம்பூர், டிச 30 - டுரியான் துங்காலில் மூன்று ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான குரல் பதிவுகளை தடயவியல் பகுப்பாய்விற்காக சைபர் செக்யூரிட்டி மலேசியாவிடம் காவல்துறை ஒப்படைத்துள்ளதாகப் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
புகார் அளித்தவர் உட்பட குடும்பத்தினரிடமிருந்தும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளிடமிருந்தும் பெறப்பட்ட குரல் பதிவுகளை, ஒப்பீட்டு சரிபார்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
"நாங்கள் இன்னும் மலேசிய சைபர் செக்கியூரிட்டியின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். இது முக்கியமான ஆதாரங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் குரல் இடம் பெற்றிருப்பதாகக் கூறும் குரல் பதிவைப் புகாரளித்தவர் சமர்ப்பித்தார். எனவே நாங்கள் அதை உறுதிப்படுத்த வேண்டும்." என்றார் டத்தோ எம். குமார்.
குரல் பதிவு பகுப்பாய்வின் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் அதேவேளையில் தொடர் உத்தரவு மற்றும் ஆலோசனைக்காக இதன் விசாரணை அறிக்கை தேசிய சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக டத்தோ எம். குமார் கூறினார்.
இவ்வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது எந்தவோர் அமலாக்க நடவடிக்கையிலும் தீவிரமாக ஈடுபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


