ஈப்போ, டிச 30: நேற்று ஈப்போ, ஜாலான் சுல்தான் நஸ்ரின் ஷாவில் உள்ள நேஷனல் கார்டன் பிளாட்டில் உள்ள ஆறு அடுக்குமாடி குடியிருப்புகள் தீ விபத்தில் எரிந்து நாசமாகின. ஆனால் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு மதியம் 1.49 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டு உதவி இயக்குநர் ஷஸ்லீன் முகமட் ஹனாஃபியா கூறினார்.
“சம்பவ இடத்திற்கு வந்தவுடன், மூன்று வீடுகளில் தீப்பற்றி எரிந்தது கொண்டிருந்ததும், பின்னர் பிற மூன்று வீடுகளுக்குப் தீ பரவியதும் கண்டறியப்பட்டது. 40 அடி x 25 அடி அளவு கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றும் சுமார் 90 சதவீதம் எரிந்தன,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பல வீடுகள் பூட்டப்பட்டதோடு இரும்பு கிரில்கள் பொருத்தப்பட்டிருந்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதில் சிரமப்பட்டதாக அவர் கூறினார்.
பிற்பகல் 2.30 மணிக்கு தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டதாகவும், மாலை 5.49 மணிக்கு தீயை அணைக்கும் பணி நிறைவடைந்ததாகவும் ஷஸ்லீன் கூறினார்.


