ஜோகூர் பாரு, டிசம்பர் 28 - இன்று காலை 8.55 மணி அளவில் பாகோவின் புக்கிட் கெப்போங்கில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
10 கிலோ மீட்டர் ஆழத்தில் 2.4 டிகிரி வடக்கு மற்றும் 102 டிகிரி கிழக்கில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) தெரிவித்துள்ளது.
"பாகோவிலிருந்து தென்மேற்கே 16 கி. மீ. தொலைவில் மையமிட்ட இந்த நிலநடுக்கம் மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்த வில்லை" என்று மெட் மலேசியா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஹபீஸ் காசி, நிலைமை கட்டுப் பாட்டில் இருப்பதாகவும், உயிரிழப்புகள் அல்லது சொத்து சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் கூறினார்.
சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுடன் மாநில அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.பொதுமக்கள் அமைதியாக இருக்கவும், நிலையற்ற கட்டமைப்புகளில் இருந்து விலகி இருக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அவர் அறிவுறுத்தினார்.


