ஈப்போ, டிசம்பர் 27 - பண்டார் பாரு புத்ராவின் பெர்சியாரன் புத்ராவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று தனது குடும்ப உறுப்பினர்கள் இருவரை காயப்படுத்தியதாக உள்ளூர் நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஈப்போ மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏ. சி. பி அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமது, காலை 6.41 மணிக்கு இந்த சம்பவம் தொடர்பாக 999 அவசர அழைப்பு வந்ததை உறுதிப் படுத்தினார், மேலும் அடுத்த நடவடிக்கைக்காக ஒரு போலீஸ் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
சந்தேக நபர் இரண்டு குடும்ப உறுப்பினர்களை காயப்படுத்தியதாகவும், வீட்டின் சுவர் மற்றும் கூரையில் ஏறி தப்பிச் செல்வதற்கு பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டிற்குள் நுழைந்த தாகவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது. "சந்தேகத்திற்குரியவர் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் இல்லாமல் சம்பவ இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டு, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்" என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இருவரும் சிகிச்சைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், தற்போது அவர்கள் நிலையான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு மனநல சிகிச்சையின் வரலாறு இருப்பதாகவும், முன்பு ஒரு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக அபாங் ஜைனல் அபிடின் மேலும் கூறினார்.இருப்பினும், சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தை அடையாளம் காண விரிவான விசாரணை இன்னும் நடந்து வருகிறது.
ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தி கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது "என்று அவர் கூறினார்."இந்த வழக்கின் முன்னேற்றத்தை ஈப்போ மாவட்ட காவல்துறை தொடர்ந்து கண்காணிக்கும், மேலும் தற்போது உள்ள சட்ட விதிகளின்படி உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.


