புத்ராஜெயா, டிச 26- கடந்த 2023 முதல் 620,000 பேருக்கான வேலை வாய்ப்புகளை MYFutureJobs பூர்த்தி செய்துள்ளது. மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
2023 முதல் டிசம்பர் 19 வரை MYFutureJobs போர்டல் மூலம் 620,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொண்ட போதிலும் மடானி அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரத்தின் மீள்தன்மையை நிரூபிக்கிறது.
இதுவரை பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை மலேசியாவின் பொருளாதார செயல்திறன் குறித்த அனைத்துலக நாணய நிதியத்தின் நேர்மறையான மதிப்பீட்டிற்கு ஏற்ப உள்ளது.
மேலும் அனைத்துலக நாணய நிதியத்தின் அங்கீகாரம் நாட்டின் உள்நாட்டு அடிப்படை வலிமையையும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட நிதி, பொருளாதாரக் கொள்கைகளின் செயல்திறனையும் பிரதிபலிக்கிறது.
வலுவான உள்நாட்டு தேவை, தொடர்ச்சியான முதலீடு, நாட்டின் தொழிலாளர் சந்தையில் ஆரோக்கியமான வேலை வாய்ப்பு வளர்ச்சி ஆகியவற்றால் நேர்மறையான வளர்ச்சி உந்தப்பட்டது என்று டத்தோஸ்ரீ ரமணன் மேலும் கூறினார்.


