கோலாலம்பூர், டிச 26 – கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிலாங்கூர் காவல்துறை போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 710 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறுகையில், பெட்டாலிங் ஜெயா, காஜாங், சுபாங் ஜெயா மற்றும் கோம்பாக் ஆகிய பகுதிகளில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஆறு பேர் 1953ஆம் ஆண்டு போதைப்பொருள் அடிமைகள் (சிகிச்சை மற்றும் மறுவாழ்வு) சட்டம், பிரிவு 3(1)-இன் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.
“இதுதவிர, காவல்துறையினர் 47 மோட்டார் சைக்கிள்களையும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் விளக்கமளித்த அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கை, சாலைப் போக்குவரத்துச் சட்ட அமலாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மூலோபாயத் திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
“சாலை ரவுடித்தன நடவடிக்கைகளைத் தடுத்தல், மது போதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பண்டிகைக் காலத்தில் குற்றங்களைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
“ஒட்டுமொத்தமாக, இந்த நடவடிக்கை சீராகவும் கட்டுக்குள் இருந்ததுடன், சட்ட அமலாக்கத்தை மேம்படுத்துவதிலும், சமூகத்திற்குப் பாதுகாப்பு உணர்வை வழங்குவதிலும் அதன் இலக்கை வெற்றிகரமாக அடைந்தது,” என்று அவர் கூறினார்.


