ஜோகூர், டிச 26 - கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை பிற்பகல் மணி 12.30 வரையில் ஓப் கிறிஸ்துமஸ் மற்றும் ஓப் புத்தாண்டு (Op Krismas மற்றும் Op Ambang Tahun Baru) சோதனை நடவடிக்கையில் ஜோகூர் காவல்துறை 4,433 போக்குவரத்து சம்மன்களை வெளியிட்டுள்ளது.
இந்த சம்மன்கள் குறிப்பிட்ட சோதனை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்ட முதல் இரண்டு நாட்களிலே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படும் இந்த இரண்டு நடவடிக்கைகளும் எதிர்வரும் ஜனவரி முதலாம் தேதி வரை தொடரும். இதற்காக, மாநிலம் முழுவதும் 1,681 அதிகாரிகளும் காவல்துறை உறுப்பினர்களும் ஒவ்வொரு நாளும் சுழற்சி அடிப்படையில் பணியில் ஈடுபடுவதாக ஜோகூர் காவல்துறை தலைவர் டத்தோ அப்துல் ரஹமான் அர்ஷாட் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக வாகனங்களில் மாற்றம் செய்வது, பதிவு எண் இல்லாதது, பதிவு எண்ணை மாற்றியமைப்பது, ஓட்டுநர் உரிமம் மற்றும் காப்பீடு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் அந்த சம்மன்கள் வழங்கப்பட்டன.
"சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா மட்டுமின்றி, இதர மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் பயணிகளின் வருகையினாலும் ஜோகூர் கவனம் பெறுகின்றது. அதனால்தான் நாங்கள் இந்த நடவடிக்கையைத் தொடங்கினோம். ஜோகூரில் குற்றங்களைத் தடுக்கவும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் விரும்புகிறோம்," என்றார் அவர்.
ஜோகூரின், இஸ்கண்டார் புத்ரியில் மாலை மணி ஐந்து தொடங்கி இரவு மணி 11 வரை மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அதில், 52 மோட்டார் சைக்கிளோட்டிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல்வேறு குற்றங்களுக்காக 143 சம்மன்கள் பிறப்பிக்கப்பட்டன.
--பெர்னாமா


