ஷா ஆலம், டிச 26 – கோல லங்காட் நகராண்மை கழகத்தால் (MPKL) RM1.9 மில்லியன் செலவில் உருவாக்கி வரும் விலங்கு பாதுகாப்பு மையத்தின் கட்டுமானம் அடுத்த மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தெரு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த விலங்கு பாதுகாப்பு மையம், ஜாலான் சுல்தான் அப்துல் சமட், கோல லாங்காட்டில் உள்ள ஒரு ஹெக்டர் பரப்பளவில் உருவாகி வருகிறது என கோல லாங்காட் நகராண்மை கழகத் தலைவர் முகமட் ஹாஸ்ரி நோர் முகமட் கூறினார்.
“இந்த மையத்தில், விலங்குகள் ஒதுக்கப்பட்ட இடங்களில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சட்டவிரோதக் குப்பை கொட்டுதல், நில பயன்பாட்டு விதிமீறல்கள் ஆகியவற்றை கண்காணிப்பதற்காக எம்பிகேஎல் சாலை போக்குவரத்துத் துறை, மாவட்ட மற்றும் நில அலுவலகம் உள்ளிட்ட பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும், அதிக பிரச்சனை உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன.
“இந்த ஆண்டில், ஜாலான் செம்பாடான் மற்றும் ஜாலான் சிஜங்காங் உத்தாமா ஆகியவை சட்டவிரோதமாகக் குப்பை கொட்டும் நடவடிக்கைக்கான முக்கிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மாவட்டத்திற்கு வெளியிலிருந்து வரும் தொழிற்சாலை கழிவுகளை உட்படுத்துகின்றன,” என்று அவர் கூறினார்.


