கிள்ளான், டிச 26 - எதிர்வரும் ஜனவரி 1 முதல் கிள்ளான் அரச மாநகர மன்றம் சிலாங்கூரில் நிலைத்தன்மை கட்டணத்தை அமுல்படுத்தத் தயாராகி வருகிறது.
மாநிலத்தில் சுற்றுலா அனுபவத்தின் ஒட்டுமொத்த தரத்தை உயர்த்துவதோடு, சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் அதன் செலவுகளை ஈடுகட்ட உதவும் இந்த முயற்சியை முழுமையாக ஆதரிப்பதாக கிள்ளான் மேயர் டத்தோ அப்துல் ஹமீட் ஹுசைன் கூறினார்.
ஹோட்டல் வகை மற்றும் தங்கும் இடத்தின் அடிப்படையில் இக்கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
அதாவது, 4 மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு ஒரு நாள் இரவு RM7, 1 முதல் 3 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தர அந்தஸ்தை கொண்டிராத ஹோட்டல்களுக்கு RM5, பட்ஜெட் ஹோட்டல் மற்றும் சுற்றுலா விடுதிகளுக்கு RM2 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், ஹோம்ஸ்டே மற்றும் MOTAC கீழ் பதிவுச் செய்யப்பட்ட தங்குமிடங்களுக்கு RM3, ``camping`` மற்றும் ``campervan`` தளங்களுக்கு RM3 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டணம் ஊராட்சி மன்ற அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுவதோடு ஹோட்டல் நிர்வாகிகள் வசூல் மேலாளராக செயல்படுவர்.
அடுத்தாண்டு கிள்ளான் மாநகரை நிலைத்தன்மைமிக்க, சுத்தமான மற்றும் வசதியான வாழ்விடமாக மாற்ற எம்பிடிகே தொடர்ந்து நகர வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மற்றும் பொது சேவைகளை மேம்படுத்தவும் உறுதிபூண்டுள்ளது.


