சிரம்பான், டிச 26 — கடந்த டிசம்பர் 18 அன்று பெடாஸில் உள்ள கம்போங் பத்து 4இல் அமைந்துள்ள வீடொன்றில் புதைக்கப்பட்ட நிலையில் சூரி நருடினின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் மீது இன்று தம்பின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
51 வயதான அந்நபர் மீது தண்டனைச் சட்டப் பிரிவு 302 இன் கீழ் கொலைக் குற்றம் சாட்டப்படும் என்று நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமட் தெரிவித்தார்.
"முன்னர் தடுத்து வைக்கப்பட்ட 41 வயதான நபர், அரசு தரப்பு சாட்சியாக இருப்பார்" என்றும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சட்டச் செயல்பாட்டில் தலையிடக்கூடிய எந்தவொரு ஊகங்களிலிருந்தும்
விலகி இருக்குமாறு அல்சாஃப்னி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கவும் வலியுறுத்தினார்.
முன்னதாக, பெடாஸின் கம்போங் பத்து 4இல் உள்ள ஓர் ஆளில்லாத வீட்டின் பின்னால், பையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல், டிசம்பர் 8 முதல் அம்பாங்கில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒரு பெண்ணின் உடல் என்று நம்பப்படுவதாக அல்சாஃப்னி கூறினார்.
பின்னர், 51 மற்றும் 41 வயதுடைய இரண்டு ஆண்களைக் காவல்துறை கைது செய்தனர். பரிசோதனை மற்றும் கைரேகை ஒப்பீடு நடவடிக்கைக்கு பிறகு, இறந்தவர் 53 வயதான சூரி நருடின் என அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.


