ஷா ஆலம், 25 டிசம்பர்: டேவான் நெகாரா வில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 2025 ஆண்டு பகடிவதை தடுப்பு சட்ட மசோதா (RUU Antibuli 2025), பகடிவதை கலாச்சாரத்தைத் தடுப்பதில் வெறும் அடையாளச் சின்னமாக மட்டும் ஆகிவிடாமல் இருக்க முழுமையாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கல்வி நிறுவனங்களில் இது பயனுள்ளதாக இருக்க வேண்டும்.பாக்கெட் ஆஃப் பிங்க் கல்வி இணை இயக்குநர் சுயாஷா ஸ்ரீ சுகேந்திரன், இந்தச் சட்டம் பகடிவதை பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். சில சிறப்பு அந்தஸ்து காரணமாக பகடிவதை செய்பவர்களை மட்டும் பாதுகாக்க கூடாது என்றார்.
“பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகப் பேசி, சட்டத்தால் ஆதரிக்கப்படும் போது தான் உண்மையான பாதுகாப்பு உருவாகும். நிறுவனத்தின் புகழையோ அல்லது ஆர்வமுள்ள பகடிவதை செய்பவர்களை பாதுகாப்பது அல்ல” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
இந்தச் சட்டத்தின் நிறைவேற்றம், நாடு இப்போது பகடிவதை பிரச்சினையைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறி என்றும், எந்தவொரு துன்புறுத்தலையும் இனி சகித்துக் கொள்ள மாட்டோம் என்றும் அவர் கூறினார்.
ஆனால், இந்தச் சட்டத்தின் வெற்றியை வெறும் நிறைவேற்றத்தால் மட்டும் அளக்க முடியாது என்றார். தெளிவான வழிகாட்டுதல்களின் அமலாக்கமும், தகவல் அளிப்பவர்களுக்கான பாதுகாப்பும் முக்கியம் என்று கூறினார்.
“ஆர்வமுள்ள தரப்புகளின் தலையீடு இல்லாத சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான புகார் செய்யும் வழிமுறை தேவை. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் முன்வந்து புகார் அளிக்க முடியும்” என்று அவர் உறுதியாகக் கூறினார்.
சில பெற்றோர்களும் ஆசிரியர்களும் மௌனமாக இருப்பது பகடிவதை முழுமையாக ஒழிப்பதற்கு தடையாக உள்ளது என்று அவர் கவலை தெரிவித்தார்.“மலேசியாவில் பல பகடிவதை சம்பவங்கள் புகாரளிக்க படுவதில்லை . பாதிக்கப்பட்டவர்களே குற்றம் சாட்டப் படுகின்றனர்.
ஆசிரியர்களோ நிர்வாகிகளோ உள் விவகாரமாகத் தீர்த்துவிட முயல்கின்றனர். இது மறுப்பு கலாச்சாரமும் நிறுவனத்துக்கு அஞ்சும் போக்கும் உள்ளதை காட்டுகிறது” என்றார்.இது நிலைமையை மேலும் மோசமாக்குவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக் காமல் போவதாகவும், பகடிவதை செய்பவர்கள் தண்டனை இன்றி தப்பிப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கு, பாதிக்கப்பட்டவர்கள் நம்பகமான நபர்களிடம் – பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது நண்பர்களிடம் – தைரியமாகத் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்க பட வேண்டும் என்றார். அதனால் ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.“பொது கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு முக்கியம்.
பகடிவதை இனி சகஜமானதாகவோ மௌனமாக விடப்பட வேண்டியதாகவோ கருதப்படக் கூடாது” என்றார்.2025 ஆண்டு பகடிவதை தடுப்பு சட்ட மசோதாவின் அமலாக்கம் வெளிப்படையாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதனால் பாதுகாப்பான கற்றல் சூழல் உருவாகும்.கடந்த டிசம்பர் 3 அன்று டேவான் ராக்யாட் 2025 ஆண்டு பகடிவதை தடுப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றியது. இது கல்வி சூழலை பகடிவதை இல்லாத பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கான விரிவான சட்ட முன்முயற்சி ஆகும்.


