கோலாலம்பூர், 24 டிசம்பர்: ஆண்களிடையே உள்ள கருத்தரிப்புத் திறன் (kesuburan) பிரச்சினைகள், தம்பதிகள் குழந்தை பெறுவதில் சிரமப்படுவதற்கான கிட்டத்தட்ட பாதி காரணங்களுக்கு பங்களிக்கின்றன என்று தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியத்தின் (LPPKN) துணைக் கருத்தரிப்பு நிபுணத்துவ மைய மருத்துவ அதிகாரி டாக்டர் அஹ்மட் ஜாகி அஸ்ரஃப் தெரிவித்தார்.
எனினும், இந்தப் பிரச்சினை இன்னும் போதுமான அளவு விவாதிக்கப் படுவதில்லை மற்றும் பெரும்பாலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பிரச்சினையாக தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது என்றார் அவர்.
“சமூகத்தில், ஒரு தம்பதி கர்ப்பம் தரிக்க முடியாமல் போனால், பெண்ணே பெரும்பாலும் குற்றம் சாட்டப் படுகிறார். ஆனால் உண்மையில் ஆண்களும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் WHO சர்வதேச தரவுகளின்படி, ஆண் காரணிகள் தம்பதிகளின் கருத்தரிப்பு பிரச்சினைகளில் தோராயமாக 45 சதவீதத்தை ஏற்படுத்துகின்றன” என்று அவர் இன்று இரவு பெர்னாமா டிவி தயாரிப்பான ‘காசிஹ் லென்சா கெலுஆர்கா’ பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ‘லெலாகி சிஹாட் லுவார் டாலம்’ என்ற தலைப்பில் விருந்தினராகக் கலந்து கொண்டு கூறினார்.
ஆண்களின் கருத்தரிப்பு பிரச்சினைகள் பொதுவாக இரண்டு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியவை: பாலியல் செயல்பாடு மற்றும் விந்து தரம். இதில் மிகப்பெரிய பங்களிப்பை அளிப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றார் டாக்டர் அஹ்மட் ஜாகி.
LPPKN-இல் நடத்தப்பட்ட விந்தணு பகுப்பாய்வு-களின்படி, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆண்களின் விந்தணு மாதிரிகளில் தோராய-மாக 60 சதவீதம் இயல்புக்கு மாறானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது: விந்தணுக்களின் எண்ணிக்கை, அவற்றின் இயக்கம் மற்றும் வடிவம்.“ஆரோக்கியமான விந்தணு எண்ணிக்கை ஒரு மில்லி லிட்டருக்கு 15 மில்லியனுக்கும் மேல் இருக்க வேண்டும்; முன்னோக்கி செயலில் இயங்குவது 32 சதவீதத்துக்கும் மேல்; குறைந்தபட்சம் 4 சதவீதம் இயல்பான வடிவத்தில் இருக்க வேண்டும்” என்றார் அவர்.
இந்த அளவு கோல்களில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்யத் தவறினால், பாலியல் உறவு இயல்பாக நடந்தாலும் இயற்கையான கர்ப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பு பாதிக்கப்படும் என்றார்.
விந்தணு பிரச்சினைகளுக்கான காரணங்கள் பற்றி விளக்கிய அவர், வாழ்க்கை முறை காரணிகளே மாற்றக்கூடிய முக்கிய பங்களிப்பாளர்கள் என்றார். இதில் உடல் பருமன், புகைப்பழக்கம் மற்றும் புகைப் பழக்கத்துக்கு ஆளாகுதல் ஆகியவை அடங்கும். உடல் எடை அதிகரிப்பு ஆண் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் ஈஸ்ட்ரோஜனாக மாற்றி ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து விந்தணு உற்பத்தியை பாதிக்கும் என்றார்.
“புகைப்பழக்கம் நுரையீரலை மட்டுமல்லாமல், சிகரெட் புகையில் உள்ள ரசாயனங்கள் இரத்த ஓட்டத்தில் கலந்து இனப்பெருக்க உறுப்புகளின் செயல் பாட்டை பாதிக்கும்” என்றார்.விந்தணு பிரச்சினை தவிர, சில ஆண்கள் பாலியல் கோளாறுகளான விறைப்புத்தன்மை இன்மை (disfungsi ereksi) மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் (ejakulasi pramatang) போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இவை விந்தணு தரம் இயல்பாக இருந்தாலும் விந்தணு முட்டையை அடைவதைத் தடுக்கும் என்றார்.தேசிய சுகாதார ஆய்வின்படி, மலேசியாவில் 10 ஆண்களில் 3 பேர் விறைப்புத் தன்மை இன்மை பிரச்சினையால் பாதிக்கப் பட்டுள்ளனர் – இதில் 20 முதல் 35 வயது இளைஞர்களும் அடங்குவர்.
உளவியல் காரணிகள், ஆரோக்கியமற்ற பழக்கங்கள், ஆபாசப் பொருட்கள் பயன்பாடு மற்றும் யதார்த்தமற்ற பாலியல் எதிர்பார்ப்பு ஆகியவை இளைஞர்களிடையே இந்தப் பிரச்சினை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள் என்று அடையாளம் காணப் பட்டுள்ளன.
இதனால், ஆரம்ப கட்ட சுகாதாரப் பரிசோதனை மற்றும் சிகிச்சையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். தொழில் முறை மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றார். இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ள, LPPKN ஆண்கள் நலவாழ்வு கிளினிக்கை நிறுவியுள்ளது. இதில் சுகாதார சோதனை, கவுன்சிலிங் மற்றும் நேரடி சிகிச்சை வழங்கப்படுகிறது. இது ஆண்களின் கருத்தரிப்பு மற்றும் பாலியல் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்க உதவுகிறது.
“ஆண்களுக்கும் தனிப்பட்ட உணர்வுகளும் அழுத்தங்களும் உண்டு. பாதுகாப்பான இடத்தில் பேச அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப் பட்டால், பலர் உதவி பெற விரும்புகின்றனர்” என்று அவர் கூறினார்.


