கோலாலம்பூர், டிச 24- மலேசிய சமூக நலத்துறை (ஜேகேஎம்) எந்தவொரு மலேசிய அதிகாரப்பூர்வ மூத்த குடிமக்கள் அட்டையையும் வெளியிடவில்லை.
சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் பரவி வரும் போலித் தகவல்கள், பொதுமக்களை, குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களைக் குழப்பலாம்.
"பொதுமக்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவும், சரியான, நம்பகமான மற்றும் சமீபத்திய தகவல்களை ஜேகேஎம்-இன் அதிகாரப்பூர்வ வழிகள், அதன் இணையத்தளம் மற்றும் சமூக ஊடக கணக்குகள் மூலம் மட்டுமே பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
"அந்த வழிகளில் ஜேகேஎம் அதிகாரப்பூர்வ இணையத்தளம், Facebook, Instagram, TikTok மற்றும் X பக்கம் ஆகியவை அடங்கும். இதன் மூலம் பெறப்படும் தகவல்கள் உண்மையானவை மற்றும் சமீபத்தியவை என்பதை உறுதிப்படுத்தலாம்," என்று ஜேகேஎம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
சமூகத்தின் நலன் மற்றும் நல்வாழ்வு தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த, நம்பகத்தன்மையற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எந்தவொரு கேள்விகள் அல்லது சேவை குறிப்புகள் மற்றும் உதவி விண்ணப்பங்களை 24 மணி நேரமும் செயல்படும் தலியான் காசி 15999, வாட்ஸ்அப் 019-261 5999 மூலம் அல்லது அருகிலுள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு செய்யலாம்.
அண்மையில், "ஜனவரி முதல் மூத்த குடிமக்கள் அட்டைக்கு விண்ணப்பிக்கவும்" என்ற தலைப்பில் ஒரு செய்தித்தாள் துணுக்கு வைரலானது. இது ஜேகேஎம் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கப்பட வேண்டும் என்றும், மூத்த குடிமக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் தள்ளுபடிகள் உட்பட பல்வேறு சலுகைகளை அனுபவிக்க இது உதவும் என்றும் கூறப்பட்டது.


