கோலாலம்பூர், டிச 24– 2026ஆம் ஆண்டு பள்ளி அமர்வு முதல், பள்ளி மாறும் அனைத்து மாணவர்களும் மனநல ஆரோக்கிய நிலை உட்பட சுகாதார அறிக்கை மற்றும் ஒழுங்குமுறைப் பதிவுகளை இணைக்க வேண்டும் என்று கல்வி இயக்குநர் ஜெனரல் முகமட் அசாம் அஹ்மட் தெரிவித்தார்.
மாணவர்களின் கொடுமைப்படுத்துதல், பாலியல் தொல்லை மற்றும் உடல் பாதுகாப்பு பிரச்சினைகளைக் கையாள்வதற்காக கல்வி அமைச்சு (கேபிஎம்) வெளியிடவுள்ள புதிய பள்ளி பாதுகாப்பு வழிகாட்டுதல்களில் இதுவும் ஒன்று என்று அவர் கூறினார்.
"மூலப் பள்ளி, மனநல ஆரோக்கியம் உட்பட சுகாதார அறிக்கை மற்றும் மாணவர்களின் ஒழுங்குமுறை அறிக்கையை இணைக்க வேண்டும். ஆபத்தான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறியும் வகையில் இந்த எஸ்ஓபி (நிலையான இயக்க நடைமுறை) கடுமையாக்கப்படும்," என்று உத்துசான் மலேசியா மேற்கோள் காட்டி அவர் தெரிவித்தார்.
முன்னதாக, முக்கியமான தகவல்களை மாற்றாமல் பள்ளி மாற்றங்கள் செய்யப்பட்டதால், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பின்னணியை புதிய பள்ளிகள் அறியாமல் சம்பவங்களைத் தூண்டும் வாய்ப்பு ஏற்பட்டதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், கேபிஎம்-இன் பள்ளி பாதுகாப்புக்கான சிறப்பு குழு, பொருத்தமற்றதாக இருக்கலாம் என்று கருதப்படும் பள்ளி எஸ்ஓபிக்களை மறுபரிசீலனை செய்து வருவதாகவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மேலும் இணக்கமாக இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அசாம் தெரிவித்தார்.




